விடுதலைப் புலிகளின் தலைவரின் மீள்வரவுக்குப் பின்னாலான அரசியல்
தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் தவிர்த்து இலங்கை - இந்திய அரசியல் ஒரு சாண்கூட நகராது என்பதற்கு அண்மைய பரபரப்புக்கள் உதாரணமாகும்.
நேற்றைய தினம் தமிழக அரசியல் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட குழுவினர் திடீரென ஏற்பாடு செய்த ஊடகச் சந்திப்பில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் நலமாக இருக்கிறார் எனச் சொன்ன கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
புலிகள், பிரபாகரன் யார்? தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் தலைவர் பிரபாகரன் அவர்களும் தம் போராட்ட வாழ்க்கையின் ஊடாக விட்டுச் சென்ற செய்தி கனதியானது. அவர்கள் செய்த தியாகங்கள் அளப்பரியது.
கொள்கை
முப்பது வருடங்களுக்கு முன்னர் என்ன கொள்கைகளை முன்வைத்து ஆயுதம் தூக்கினார்களோ, போர் முடிவின் இறுதிநாள் வரைக்கும் அதே கொள்கையுடன் தான் களத்தில் நின்றார்கள்.
கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்தித் தன் ஏழேழு தலைமுறைகளுக்கும் சொத்துச் சேர்த்துக்கொண்டு அமெரிக்காவுக்கு ஓடிவிடுகின்ற தலைவர்கள் வாழுகின்ற உலகில் பிரபாகரனும், அவர் வழிநடத்திய போராளிகளும் மாத்திரமே உயிர் பிரியும்வரை களத்தில் நின்றார்கள்.
எங்கும் தப்பியோடுவது, ஒழித்து வாழ்வது எல்லாம் அவர்களது வரலாற்றிலேயே இடம்பெற்றிருக்காத சம்பவங்கள். தம் உடல், பொருள், ஆவி, குடும்பத்தினர் என அனைத்தையும் இழந்தனர். பால் மனம் மாறாத பிஞ்சுக் குழந்தையான பிரபாகரனின் மகன் கூட களத்தில்தான் பலியானார்.
அந்தச் சிறு குழந்தையின் மரணத்தைக்கூட, இங்கு நடத்தப்பட்ட மனிதப் படுகொலையின் கோரத்தை உலகிற்கு காட்ட விட்டுச் சென்றனர். மானுடர் யாருமே புரியாத இந்தத் தியாக வேள்வியின் மீது கொண்ட பற்றினால்தான் தமிழ் மக்கள் புலிகள் இயக்கத்தையும், அதன் தலைவர் வே.பிரபாகரன் அவர்களையும் தெய்மாக்கித் தொழுகின்றனர்.
சாட்சியாகும் அஞ்சலி நிகழ்வு
ஈழத்தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள்? விடுதலைப் புலிகளும், தலைவர் வே.பிரபாகரன் அவர்களும் ஈழத்தமிழர்களுடன் இரண்டறக் கலந்தவர்கள். ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்துப் பார்க்கவோ, பிரித்தெடுத்து அரசியல் செய்யவோ இயலாதவர்கள்.
அதற்கு ஒவ்வொரு வருடமும் பெரும் இராணுவ நெருக்கடிகள் - தடைகளுக்கு மத்தியில் ஈழத்தமிழ் மக்கள் சுயமாகத் திரண்டெழுந்து மாவீரர்களுக்கு செய்யும் அஞ்சலி நிகழ்வே சாட்சியாகும். இதனை முன்கூட்டியே ஊகித்த புலிகள், தமிழ் மக்கள்தான் புலிகள், புலிகள்தான் மக்கள் என்றனர்.
தற்போது புலிகளற்ற 13 ஆண்டுகளில் ஈழத்தமிழர்கள் புலிகளையும் அதன் தலைவரையும் இருந்தால் தலைவன் இல்லையேல் இறைவன் என்கின்றனர். ஒரு விடுதலை இயக்கத்திற்கும் அதன் மக்களுக்கும் இவ்வளவு ஆழமான புரிதலுடன் கூடிய உறவு நீடிக்கிற நிலையில் எவ்வித வெளிச்சக்திகளும் அதற்குள் நுழைந்து அரசியல் செய்துவிடமுடியாது.
அதையும் மீறி எதாவது செய்ய நினைத்தால் அது ஈழத்தமிழர்களுக்கு மேலும் அழிவை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நிரலுக்கானதாகவே அது அமையும். அண்மைக்காலமாக ஈழத்தமிழர்களின் போராட்ட வெளி அதிகரித்திருக்கின்றது.
தமிழ் மக்களின் அபிலாசைகள்
வெளிச்சக்திகளினால் தமக்கு சேவகம் செய்யக்கூடிய அரசியல் வெருளிகளைக் கையாள முடிகின்ற போதிலும், தமிழ் மக்களை எவராலும் கையாள முடியவில்லை.
மூடிய அறைகளுக்குள் ரகசியம்பேசி, தமக்கு நலன்சேர்க்கும் ஏதாவது ஒரு விடயத்தை ஆரம்பித்தால் அதனைத் தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் வகையில் மிகவேகமாக மாற்றியமைத்து விடுகின்றனர்.
நபர்களை, அரசியல் கட்சிகளை, தலைவர்கள், சமூக மட்ட அமைப்புக்களை என அனைத்துத் தரப்பினரையும் கையாண்டு பார்த்தும், தமக்கு இயைபானதொரு மக்கள்கூட்டத்தை ஈழத்தின் வடக்கு, கிழக்கு பாகங்களில் கட்டமைக்க முடியவில்லை. போராடுவதும், உண்மைகளை உடனடியாகவே வெளிச்சொல்லி அம்பலப்படுத்திவிடுவதும் அவர்தம் உதிரத்தில் கலந்ததாகிவி்ட்டது.
இந்தக் குணத்தின் அடிப்படை எது என்று ஆராய்ந்தால், அது புலிகளிடத்தில் முடிவடைவதைப் பார்க்கலாம். எனவே புலிகள் - தலைவர் வே.பிரபாகரன் தொடர்பில் தமிழர்கள் கொண்டிருக்கின்ற பற்றினை சிதைத்தால் மாத்திரமே தமிழ் விரும்புகின்ற மாற்றத்தை தமிழ் மக்கள் மயப்படுத்த முடியும் என்கிற முடிவுக்கு புலிகளுக்கு உயிர்கொடுக்க முனைகின்ற வெளிச்சக்திகள் நம்புகின்றன.
அரச ஒடுக்குமுறைகள்
எனவே மக்கள் மத்தியில் அவ்வியக்கத்தின் மீதான அதிருப்தியலைகளை உருவாக்கும் நோக்கில் செயற்படத் தொடங்கியிருக்கின்றன.
அண்மைக்காலமாகவே எல்லாவித அரச ஒடுக்குமுறைகளையும் கடந்து தமிழர்கள் தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கியிருக்கின்றனர். அரசியல் விடயங்களில் அதிக அறிவுமயப்படுகின்றனர்.
அடுத்தடுத்த தலைமுறைகள் நோக்கியும் புலிகள் இயக்கம் பற்றிய விடயங்கள் கடத்தப்படுகின்றன. பல்வேறு அழுத்தங்களின் காரணாகத் தமிழ் அரசியல்கைதிகள் விடுதலையாகிக்கொண்டிருக்கின்றனர். எனவே தமிழர்களுக்கு ஏதாவது நன்மைகள் நடந்துவிட்டால், அது தமது இருப்பிற்கே ஆபத்தானதாக மாறிவிடும் என அஞ்சுகின்ற சக்திகள், புலிகள் மீள வருகிறார்கள் எனக்காட்டி, இலங்கை இராணுவத்தரப்பிற்கு உசுப்பேற்றிவிடுகின்றனர்.
மீளவும் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு உயிர்ப்பூட்டுகின்றனர். ஜனநாயக ரீதியில், கருத்துரிமை தளத்தில் தமக்கிருக்கும் உரிமைகளைப் பயன்படுத்தி நியாயமாகப் போராடும் தரப்பினருக்கு பயங்கரவாத முத்திரை கொடுத்து அமுக்குவதற்கு வழியேற்படுத்திக் கொடுக்கப்படுகின்றது.
இலங்கைக்கு எவ்வளவுதான் தீனி போட்டாலும் அதன் பசி அடங்குவதாக இல்லை என்ற முடிவுக்கே இந்தியா வரவேண்டும். கடந்த 2800 வருட காலமாக இந்திய மேலாதிக்கத்தை எதிர்த்து சிங்கள தேசம் போராடி வந்திருக்கின்றது. இந்த மிகப்பெரும் காலப் பகுதியில் சோழர்களைத் தவிர வேறு எந்த இந்தியத் தரப்பினாலும் இலங்கை ராஜீக ரீதியில் கட்டுக்குள் வைத்திருக்க இயலவில்லை.
இந்தியாவுக்கு இருக்கும் மிகப்பெரும் பாதுகாப்புசார் தலையிடியாக இலங்கை வந்திருக்கிறது. நீ தராவிட்டால் உனக்கு அச்சம் தரும் சக்தியிடம் போவேன் என்கிற கோசத்தின் அடிப்படையில் இந்தியாவைக் கையாளும் இலங்கையினிடத்தில் இந்தியா 2800 வருடகாலத் தோல்வியைச் சந்தித்திருக்கிறது.
தற்போதும்கூட இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்க இந்தியா தன் சக்திக்கு அப்பாற்பட்ட உதவிகளைச் செய்தது. இந்த உதவிகளின் பிரதிபலனாகத் தனக்கு நன்மையளிக்கும் 13ஆம் திருத்தத்தின் அரைப்பங்கையாவது நடைமுறைப்படுத்துமாறே இலங்கையை வலியுறுத்தியது.
ஆனால் இலங்கையோ வாங்குவதையெல்லாம் வாங்கிக்கொண்டு, கடன் மறுசீரமைப்பு தொடர்பான கடிதத்தையும் பெற்றுக்கொண்டு, பழையபடி முருங்கையில் ஏறிக்கொண்டது. இலங்கையின் அரசியலின் இயக்க சக்தியாக இருக்கும் பௌத்த பிக்குகளைக் கொண்டு 13 ஆம் திருத்தச் சட்டத்தையே எரியூட்டிவிட்டது.
இந்தியா எந்த வடிவிலும் சிங்களத் தேசியவாத அரசியலுக்குள் நுழைய முடியாது. நுழைந்தால் எரிப்போம் என்கிற மனநிலையில்தான் சிங்கள தேசம் எழுந்துநிற்கிறது. எனவே இலங்கையை மிரட்டுவதற்கு புலிகள் தொடர்பான அறிவித்தலை பழ.நெடுமாறன் ஊடாக மீளக் கையிலெடுத்திருக்கிறது இந்தியா.
இந்தியாவினாலும் தடை
இந்த அறிவிப்பின் பின்னால் இந்தியாதான் இருக்கிறது என்பது எப்படி சொல்ல முடிகிறது? புலிகள் இயக்கம் இந்தியாவினால் தடைசெய்யப்பட்டுள்ளது. அத்தோடு புலிகளின் அழிவிற்குப் பெரும்பங்காற்றிய நாடும் இந்தியா ஆகும். 2019ஆம் ஆண்டு கூட புலிகள் மீதான தடைவிதிப்பை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீடித்த நாடு இந்தியா.
இந்நிலையில் பொதுவெளியில் தோன்றி, ஊடகங்களுக்கு முன்பாக பழ.நெடுமாறன் போன்ற ஒரு தலைவர் (ஏற்கனவே பொடா சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டவர்) பிரபாகரன் நலமுடன் இருக்கிறார். அவருடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன். மீளவும் வருவார் என அறிக்கை விடுவதெல்லாம் எந்தத் துணிச்சலில் இடம்பெறுகின்றது.
கண்ணுக்கு முன்பாக நடந்த குஜராத் படுகொலை பற்றிய பிபிசியின் ஆவணப்படத்தைத் திரையிடுவதற்கே தடைவிதித்த நாடு புலிகள் இயக்கம் பற்றிய பொது அறிவிப்புக்கு எவ்வாறு அனுமதி கொடுக்கும்? இந்த செய்தியின் பின்பு இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் ஒரே சுருதியில் அலறவிடப்பட்டதன் நோக்கம்தான் என்ன? இலங்கை என்றுமி்ல்லாத பொருளாதார சீரழிவையும், அரசியல் ஸ்திரமின்மையையும் எதிர்கொண்டிருக்கிறது.
தமக்கும், சிங்கள தேசத்திற்கும் விசுவாசமான தலைவர் யார் என்பதைக் கண்டுபிடிப்பதற்கே சிங்கள மக்கள் படாதபாடுபடுகின்றனர். முன்பெல்லாம் புலிகளையும், தமிழர்களையும் கொன்றொழிப்பேன் எனச் சபதமிடும் தலைவர்களின் யாரின் சுருதி அதிகமாகக் கேட்கிறதோ அவர்களை ஏக தலைவர்களாகத் தெரிவு செய்வது சிங்கள மக்களுக்கு எளிதாக இருந்தது.
புலிகளற்ற நிலையில் நிலமை அவ்வாறில்லை. நம்பியிருந்த கோட்டபாய ராஜபக்சவே இரண்டு வருடங்களுக்குக்குக் கூட தன் மக்களுக்கு உண்மையாக இருக்கவில்லை. எனவே தமது தலைவர்கள் விடயத்தில் சிங்கள மக்கள் விரக்தியுற்றுள்ளனர்.
தம் கடந்த கால அரசியல் தெரிவுகள் குறித்து மீள்விசாரணை செய்கின்றனர். தாம் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கிறோம் என்ற புரிதலுக்கு வரத்தொடங்கியிருக்கின்றனர். இந்தப் புரிதல் சிங்கள மக்கள்மயப்பட்டால், குழம்பிய குட்டையில் மீன்பிடித்துப் பழகிய இந்தியா உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்குமே ஆபத்தானதாகும்.
புதுப்புரளி
எனவே புலிகளின் மீள்வரவு தொடர்பான புதுப்புரளியைக் கிளப்பி, சிங்கள மக்களை மீளவும் இனவாத சகதிக்குள் சிக்கித் திழைக்கவைக்கும் முயற்சியின் வெளிப்பாடாகவும் பழநெடுமாறான் காட்சிகொடுத்திருக்கிறார். உலகம் மிகவும் பரந்து விரிந்து கிடக்கிறது. தொழிலநுட்பமும், ஊடக உலகமும் சகலரையும் சென்று சேர்ந்துவிட்டது.
இனியும் பழைய முறைப்படி வந்து யாரையும் ஏமாற்றமுடியாது. அறிக்கைகளையும், பத்திரிகை செய்திகளையும், அரசியல்தலைவர்களின் மேடைப்பேச்சுக்களையும் நம்பி முடிவெடுக்கும் நிலையில் மக்கள் இல்லை.
ஆனால் இந்தியாவும், அதன் இராஜதந்திர ஜாம்பவான்களும் சுப்பரின் கோடியை விட்டு வெளியில் வரவில்லை. அதனால்தான் அவர்களை இலங்கை என்கிற குட்டித் தேசம் ஏமாற்றத்தொடங்கி 2800 வருடங்கள் ஆகின்றன.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 22 மணி நேரம் முன்

லண்டனில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்... தாயாரும் இரண்டு பிள்ளைகளும்: வெளிவரும் பகீர் பின்னணி News Lankasri

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri

சுவிட்சர்லாந்தின் Credit Suisse-UBS வங்கிகள் இணைப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு! News Lankasri
