பூரணை தினத்தில் கற்றல் நடவடிக்கை - தவிசாளர் ஆசிரியை இடையே கடும் வாக்குவாதம்
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்தில் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் பூரணை தினமான சனிக்கிழமை(03.01.2026) அன்று 7, 8, வயது சிறுவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கை இடம்பெற்றிருந்தது.
இதனை அறிந்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைத் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் அக்கல்வி நிலையத்திற்குள் திடீரென உள்நுளைந்து பூரணை தினம், மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இவ்வாறு தனியர் கல்வி நிலையங்கள் கற்பிக்க முடியாது, என அங்கு கற்பித்துக் கொண்டிருந்த ஆசிரியையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.
கடும் வாக்குவாதம்
நண்பகல் 12 மணியைக் கடந்தும் 7, 8, வயது சிறார்களுக்கு பூரணை தினம் என்பதையும் கவனிக்காமல் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடுவது ஏற்றுக் கொள்ள முடியாது என தனது விசனத்தை குறித்த ஆசிரியரிடமும் அங்கிருந்த பெற்றோரிடமும் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இச்சிறார்களுக்கு இலவசமாக அல்லாமல் நிதி வசூலித்துதானே கற்பிக்கின்றீர்கள் கல்வியை விற்கின்றீர்கள் என தவிசாளர் இதன்போது ஆசிரியரிடம் தெரிவித்திருந்தார்.
கல்வியை வாங்குவதற்கு ஆள் இருந்தால் நான் கல்வியை விற்பேன் என இதன்போது குறித்த ஆசிரிர் தவிசாளருக்குப் பதிலளிக்க இருவருக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டிருந்தது.
இந்தபிரதேசத்தில் போயாதினத்திலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் எந்தவித தனியார் கல்வி நிலையங்களிலும் கற்றல் நடவடிக்கை இடம்பெறக்கூடாது என தமது பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றி அதனை இப்பிரதேசத்திலுள்ள அனைத்து தனியார் கல்வி நிலையங்களுக்கும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகவும், பிள்ளைகளின் நலனுக்காக, அவ்வாறு செயற்பட வேண்டாம், இதனையும் மீறி கல்வி நிலையங்கள் செயற்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என இதன்போது தவிசாளர் தெரிவித்தார்.