போர் நிறைவடைந்து 12 ஆண்டுகள் கடந்தும் நாட்டில் அதிகாரம் பகிரப்படவில்லை – மைத்திரி
போர் நிறைவடைந்து 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இலங்கையில் அதிகாரப்பகிர்விற்கான பொறிமுறைமையொன்றோ அல்லது சர்வதேச ரீதியில் எதிர்பார்க்கப்படும் நல்லிணக்கமோ பூரணப்படுத்தப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தென்கொரியாவின் சியோல் நகரில் உலக சமாதான மாநாட்டில் பங்கேற்றிருக்கும் மைத்திரி, இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
போர் முடிவின் பின்னர் சமாதானம், நல்லிணக்கம், ஜனநாயக ஆட்சி ஆகியனவற்றை உருவாக்கிக் கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் அப்போதைய செயலாளர் நாயகம் பான் கீ மூன் கடும் பிரயத்தனம் மேற்கொண்டார் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நல்லிணக்க பொறிமுறைமை அமுல்படுத்தப்பட்ட போது எதிர்பார்க்கப்பட்ட வேகத்தில் அது முன்னெடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தவொரு முரண்பாட்டு நிலைமைக்கும் போர் தீர்வாக அமையப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு தரப்பிற்கும் இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதே பிரதானமானது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பயங்கரவாதிகளுடன் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகள் தோல்வியடைந்த காரணத்தினால் போர் முன்னெடுக்கப்பட்ட போதிலும், இதனை முன்னுதாரணமாக கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
போர் என்பது மனிதனுக்கு மிகவும் கசப்பான ஓர் விடயமாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.