அமெரிக்காவின் 23 மாநிலங்களில் அவசர நிலை
அமெரிக்காவில் கடும் குளிர்கால புயல் காரணமாக இன்று சுமார் 185 மில்லியன் மக்கள் குளிர்கால எச்சரிக்கைகளின் கீழ் உள்ளனர்.
தெற்கு பகுதிகளிலிருந்து வடகிழக்கு வரை உள்ள 23 மாநிலங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புயலின் தாக்கத்தால் லூசியானா மாநிலத்தின் காடோ பாரிஷ் பகுதியில் வசித்த இரண்டு ஆண்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த இருவரும் கடும் குளிரால் ஏற்பட்ட ஹைப்போதெர்மியா (உடல் வெப்பநிலை அபாயகரமாக குறைவது) காரணமாக உயிரிழந்ததாக மாநில சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
புயல் தெற்கு பகுதிகளை தாக்கி தற்போது வடகிழக்கு நோக்கி நகர்ந்துவரும் நிலையில், 8 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சாரமின்றி உள்ளனர்.
பல மாநிலங்களில் மின் இணைப்பினை மீள வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய மற்றும் கிழக்கு அமெரிக்காவின் பெரும்பகுதிகளில் ஆபத்தான அளவிலான கடும் குளிர் நிலவி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
சில பகுதிகளில் காற்றின் தாக்கத்துடன் கூடிய உணரப்படும் வெப்பநிலை மறை 20 முதல் மறை 30 பாகை செல்சியஸ் வரை குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இயல்பை விட 10 முதல் 40 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை குறைவாக பதிவாகி வருகிறது.
அடுத்த வாரத்திற்குள் நிலைமைகள் படிப்படியாக மேம்படும் என கணிக்கப்பட்டாலும், சில பகுதிகளில் பனிப்பொழிவும் கடும் குளிரும் தொடர வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் தாக்கமாக விமான போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உ
மேலும் நாளை 2,000 விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும், கடும் குளிரிலிருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.