இலங்கையில் மீண்டும் மின்வெட்டு..! வெளிவந்துள்ள புதிய அறிவிப்பு
நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று அலகுகளும் செயலிழந்ததால், நாட்டில் குறைந்தபட்சம் வரையறுக்கப்பட்ட மின்வெட்டை அறிவிக்க வேண்டியிருக்கலாம் என எரிசக்தி நிபுணர் விதுர ரலபனாவா தெரிவித்துள்ளார்.
இதில் முதல் அலகை சீரமைக்க குறைந்தது நான்கு முதல் ஐந்து நாட்கள் ஆகலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செயலிழப்பால் தேசிய மின் வலையமைப்பிலிருந்து சுமார் 900 மெகாவாட் மின்சாரம் குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சூரியசக்தி பங்களிப்பு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பகலில் சூரியசக்தி பங்களிப்பு இருப்பதால் பெரிய பிரச்சினை ஏற்படாது. ஆனால் திங்கட்கிழமை என்பதால் இன்று முதல் தேவை அதிகரிக்கும் போது நிலைமை சவாலாக மாறலாம்.
கிடைக்கும் மின் உற்பத்தி போதுமானதா என்பதில் நிச்சயமற்ற தன்மை காரணமாக, குறிப்பாக காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலான உச்சபட்ச தேவை நேரங்களில் மின்சார விநியோகத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை அதிகாரிகள் கருத்தில் கொள்ள வேண்டும்.

நாம் எண்ணெய் மற்றும் டீசல் மின் உற்பத்தி நிலையங்களை முழு நேரமும் இயக்கினாலும், மிகப் பெரிய தேவையைப் பூர்த்தி செய்ய முடியுமா என்ற கேள்வி உள்ளது. இதனால் பெரும் செலவு ஏற்படும், அது இறுதியில் பொதுமக்கள் மீதே சுமத்தப்படும்.
பற்றாக்குறையைச் சமாளிக்க உடனடி நடவடிக்கை
நுரைச்சோலை நிலையம் இயல்புநிலைக்குத் திரும்பும் வரை மின்சார விநியோகத்தை நிர்வகித்து பற்றாக்குறையைச் சமாளிக்க உடனடி நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.
இது முதல் முறை அல்ல. இந்தச் செயலிழப்புகளுக்கான காரணங்களைப் பல நிறுவனங்கள் ஆய்வு செய்து, அவற்றைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என பரிந்துரைகளை வழங்கியுள்ளன. ஆனால் அந்தப் பரிந்துரைகள் போதுமான அளவில் செயல்படுத்தப்படவில்லை. பொறுப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.