12 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படலாம்! நெருக்கடி நிலை தொடர்பில் ஜனாதிபதி அறிவிப்பு
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவி பெறாவிட்டால், எதிர்காலத்தில், எரிபொருளின்றி 12 மணி நேர மின்வெட்டுடன் வாழ வேண்டிய நிலை ஏற்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கண்டி மாவட்ட வர்த்தகர்கள் மற்றும் சட்டத்தரணிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
சிறு போகத்திற்கு உரம் கிடைக்காது. இந்த நிலையில் மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். நாட்டின் அடிப்படைப் பிரச்சினை பொருளாதாரப் பிரச்சினையாகும். அதை நோக்காகக் கொண்டே நாம் செயற்பட வேண்டும். அது இல்லாமல், இந்த பிரச்சினையை மறைக்க முடியாது.
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் ஒன்றல்ல. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கும்.
நாட்டு மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க முடியும்
ஆனால், பிரதம நீதியரசர் உள்ளிட்ட அனைத்து நீதிபதிகளும் ஒன்றாக அமர்ந்தாலும் கூட நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையை, நீதிமன்றத்தில் தீர்க்கக்கூடிய ஒன்றல்ல. பொருளாதாரத்தை முன்கொண்டுசெல்லும் பொறுப்பு நாடாளுமன்றத்திற்கே இருக்கிறது.
எனவே 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க பாடுபட வேண்டும். தேவைப்பட்டால், மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி, இரான் மற்றும் ஹர்ஷ போன்றவர்களின் முன்மொழிவுகளைக் கூட சர்வதேச நாணய நிதியத்தில் சமர்ப்பிக்க முடியும்.
இதற்கான ஆதரவையும் வழங்க முடியும். சில அரசியல் கட்சிகள் முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதில்லை. இது தொடர்பாக மக்களிடம் பொய் சொல்லி அரசியல் நாடகம் ஆடுகின்றனர்.
நாட்டின் எதிர்காலத்துடன் விளையாட முடியாது. நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்திற்கு நாங்கள் பொறுப்பு. எனவே, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பத் தேவையான அனைத்து நடவடிக்கை களையும் நான் எடுப்பேன்.
யாரிடமாவது மாற்று முன்மொழிவுகள் இருந்தால், வாஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர்களுடன் கலந்துரை யாடும் வாய்ப்பை பெற்றுக் கொடுக்க விரும்புகிறேன்.
யாரும் முன்வராத நிலையிலே இந்த நாட்டை நான் பொறுப்பேற்றேன். நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகையில் பலவிதமான விமர்சனங்களுக்கு ஆளாக வேண்டி வரும் என்பதை அறிந்தே ஜனாதிபதிப் பதவியை ஏற்றேன்.
ஆனால் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் நான் எடுப்பேன். இந்த வருட இறுதிக்குள் நாட்டு மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க முடியும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பொருளாதார வளர்ச்சிக்கான ஆரம்பத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இன்று கட்சி, எதிர்க்கட்சி வேறுபாடின்றி 225 பேர் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். எனவே, மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது எப்படி என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.
அதற்கு உங்களின் தலைமைத்துவத்தை எதிர்பார்க்கிறோம். 2024 ஆகும் போது மீண்டும் வளர்ச்சியை நோக்கி பயணிப்போம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என தெரிவித்தார்.