இந்த வார இறுதி மற்றும் பண்டிகைக்காலத்தின் போதான மின்வெட்டு நேரம் தொடர்பில் வெளியானது அறிவிப்பு
இந்த வார இறுதி மற்றும் எதிர்வரும் பண்டிகைக்காலத்தின் போதான மின்வெட்டு நேரம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
அதன்படி எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மின்வெட்டு காலத்தை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன், இந்த வார இறுதியிலும் மின்வெட்டு காலத்தை குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் கூறுகையில்,
கடந்த ஒரு வாரமாக துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த டீசல் கப்பலுக்கு ஒரு தொகையை செலுத்துவதற்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனினும் வெள்ளிக்கிழமை வரை திட்டமிடப்பட்டுள்ள ஆறரை மணி நேரம் மின்வெட்டு நடைமுறையில் இருக்கும்.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முக்கிய நோக்கமாகும்.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் ஒருவர் இல்லாதது பெரும் கவலையளிக்கிறது. தற்போதைய மின்சார நெருக்கடியிலிருந்து மீள பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டியிருக்கிறது.
எனவே அப்பதவிக்கான நியமனத்தின் முக்கியத்தும் தொடர்பில் வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.