எல்லாவற்றையும் மறந்த கோட்டாபய.. வெளிநாட்டிலிருந்து ஊடகவியலாளர் வெளியிட்ட பதிவு
வெளிநாட்டில் வாழும் இலங்கை ஊடகவியலாளர் போத்தல ஜயந்த, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று நீதிமன்றத்தில் வழங்கிய சாட்சியம் குறித்து பதிலளித்துள்ளார்.
தமக்கு போத்தல ஜயந்தவைத் தெரியாது என கோட்டாபய நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்த நிலையிலேயே இந்தப் பதில் வெளியாகியுள்ளது.
போத்தல ஜயந்த வெளியிட்டுள்ள நீண்ட சமூக ஊடகப் பதிவொன்றில், கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் இடம்பெற்ற சந்திப்பு குறித்து ஜயந்த நினைவுகூர்ந்துள்ளார்.
குறித்த பதிவில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் தொடர்பாக, தாமும் சக ஊடகவியலாளர் சனத் பாலசூரியவும் பாதுகாப்பு அமைச்சுக்கு அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நீதிமன்றத்தில் வழங்கிய வாக்குமூலம்
சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டுத் தாக்கப்பட்டமைக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்தே இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக ஜயந்த தெரிவித்துள்ளார்.

அப்போது பந்துல பத்மகுமார மற்றும் லக்ஷ்மன் ஹுலுகல்ல ஆகியோர் முன்னிலையில், போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்தால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என கோட்டாபய எச்சரித்ததாக அவர் கூறியுள்ளார்.
குறித்த அச்சுறுத்தல்கள் தொடர்பாகப் பொலிஸில் முறைப்பாடு அளிக்க முயன்றபோது, கோட்டைப் பொலிஸ் நிலைய அதிகாரிகள் அதனைப் பதிவு செய்ய மறுத்ததாகவும் ஜயந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

சில மாதங்களின் பின்னர், வெள்ளை வானில் கடத்தப்பட்டுக் கொடூரமாகத் தாக்கப்பட்டதில் இடது காலில் கடும் காயங்கள் ஏற்பட்டதாகவும், 28 நாட்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து ஆறு மாதங்கள் படுக்கையில் இருந்ததாகவும், தற்போதும் பகுதியளவான இயலாமையுடன் வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் காணாமல் போனமை தொடர்பான வழக்கில் கோட்டாபய சாட்சியமளிக்கையில், போத்தல ஜயந்தவைத் தெரியாது என்றும் பந்துல பத்மகுமாரவைத் தெரியும் என்றும் கூறியிருந்த நிலையிலேயே அவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
மேலும், "என்னை வதைத்தவர்கள் என்னை மறந்திருக்கலாம், ஆனால் என்னை வதைத்தவர்களை நான் மறக்கவில்லை" என ஜயந்த பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.