கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முல்லைத்தீவு(Mullaitivu) - கொக்குதொடுவாய் பகுதியில் 29.06.2023 அன்று கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றிருந்தது.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இன்றையதினம் (04) இடம் பெற்ற வழக்கு விசாரணைகளில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் மயில்வாகனம் செல்வரட்ணம், கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,கொக்கிளாய் பகுதி கிராம அலுவலர், சட்டத்தரணிகளான வி கே நிறஞ்சன், கணேஸ்வரன் மற்றும் காணாமல் போனோர் அலுவலகம் சார்பாக சட்டத்தரணி துஷ்யந்தினி ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
இந்நிலையில் அகழ்வு பணியினை நடாத்த இன்னும் நிதி கிடைக்கபெறவில்லை.எனவும் தற்போது அகழ்வுப்பணிக்கென போடப்பட்டுள்ள பாதீடு அதிகமாக காணப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் மயில்வாகனம் செல்வரட்ணத்தால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதைகுழியின் முதல் கட்ட அகழ்வு
இந்நிலையில் பாதீடு சீர்செய்து அனுப்பி நிதியினை பெறுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது அத்தோடு குறித்த வழக்கு விசாரணை வைகாசி மாதம் 16 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் முதல் கட்ட அகழ்வானது 06.09.2023 அன்று ஆரம்பமாகி பதினொரு நாட்கள் நடைபெற்று 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்தது மீண்டும் அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 20.11.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் நடைபெற்று மொத்தமாக 40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்ட அகழ்வுபணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.
அத்தோடு அகழ்வு ஆய்வு நடவடிக்கையின் இறுதி நாட்களில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் பரிசோதனை மூலம் மனித புதை குழிக்கு மேற்கு பக்கமாக இரண்டு மீற்றர் நீளத்திற்கு உடலங்கள் காணப்படுவதாக பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டிருந்தது.
அதனையடுத்து குறித்த அகழ்வுப்பணி இவ்வருடம் மார்ச் மாதம் நடைபெற திட்டமிடப்பட்டிருப்பந்த நிலையில் நிதி கிடைக்கப்பறாமையினால் இன்றைய தினத்துக்கு தவணையிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கின்போது அகழ்வாய்வு நடவடிக்கையில் ஈடுபட்ட தொல்லியல் திணைக்கள பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களினால் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |