இலங்கைக்கு இந்தியாவின் கிடுகுப்பிடி எச்சரிக்கை
நட்பு நாடுகளின் உதவியுடன் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது இலங்கை.
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் விஜயம் பரவலாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த விடயமாகும்.
எனினும் இந்த விஜயம் திடீரென ஒத்திவைக்கப்பட்டமையானது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்தியப் பாதுகாப்பு அமைச்சரின் இலங்கைக்கான விஜயம்
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரு நாட்டு பாதுகாப்பு உறவுகளை மீளாய்வு செய்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்தார்.
செப்டெம்பர் இரண்டாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் அவர் இலங்கையில் தங்கியிருப்பார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் திடீரென இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் இடம்பெறாது என இந்தியத் தூதரகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் அவரின் பயணத்துக்கான புதிய திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இந்திய தூதரகம் கூறியிருந்தது.
எனினும் இதற்கான காரணம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படாத நிலையில் ராஜ்நாத் சிங்கிற்கு எதிராக இலங்கையில் போராட்டங்களை நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்ததால் இந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன.
சீன ஆராய்ச்சிக் கப்பல் விவகாரம்
இதேவேளை மற்றுமொரு தரப்பு இந்தியாவால் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்ட சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியமையே காரணம் என்கிறது.
ஆராய்ச்சிக் கப்பல் என்ற போர்வையில் சீனாவின் குறித்த கப்பல் உளவு பார்க்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும் என்பதில் உறுதியாக உள்ளது இந்தியா.
இதற்கான வெளிப்படையான எதிர்ப்புக்கள் இந்திய தரப்பினரால் முன்வைக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இலங்கையில் ராஜ்நாத் சிங்கிற்கு எதிராக போராட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறு இருப்பினும் சீனாவை பகை இல்லாமல் வைத்துக் கொண்டாலும், இந்தியாவையும் கோபப்படுத்தாமல் செயற்பட வேண்டிய கட்டாயத்திலேயே இலங்கை இருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்திய முக்கியஸ்தரின் இவ்வாறான திடீர் பயண இரத்தானது இந்தியாவின் கோபத்தையும் எச்சரிக்கையையும் வெளிப்படையாக காட்டும் விதத்தில் அமைந்துள்ளதாகவும், இலங்கை மீதான சீனாவின் ஆதிக்கத்தை வெளிப்படையாகவே எதிர்க்கும் விதத்திலேயே அமைந்துள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இலங்கையின் நிலைப்பாடு என்ன?
ஏனெனில் ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணம், இலங்கையுடன் தற்போதுள்ள நட்புறவை மேம்படுத்துவதில் இந்தியாவின் தொடர்ச்சியான நிலைப்பாட்டை மீண்டும் உறுதி செய்யும் எனவும், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான நட்புறவை மேம்படுத்துவதில் இது ஒரு முக்கியமான மைல் கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
என்ற போதும் ராஜபக்சர்கள் ஆட்சி காலத்தில் சீனாவிற்கான ஆதரவு போக்கு இலங்கையில் தொடர்ந்து வந்திருந்த நிலையில் ரணில் விக்ரமசிங்க தற்போது ஆட்சியிலுள்ள இந்த நேரத்திலும் கூட குறித்த நிலைமையே தொடர்ந்து வருகிறது என்பதும் மறுக்க முடியாத விடயமாகவே உள்ளது.
இதன்படி பார்க்கும் போது இந்தியாவை நட்பாக வைத்துக் கொள்வதை காட்டிலும் சீனாவிற்கான தமது ஆதரவை வெளிப்படுத்துவதிலேயே இலங்கை மும்முரமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.