யாழில் அஞ்சல் ஊழியர்கள் போராட்டம்
யாழ். தபாலக நிர்வாக சிக்கலுக்கும், ஸ்திரமற்ற நிர்வாகத்திற்கும் எதிராக அஞ்சல் ஊழியர்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த போராட்டம் இன்றைய தினம் யாழ். பிரதான அஞ்சல் வளாகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
இதில் நிம்மதியாக கடமையாற்ற விடுங்கள், மழை வெயில் என்று பாராது கடமையாற்றும் ஊழியருக்கு மதிப்பளி, யாழ். தபாலக நிர்வாக கட்டமைப்பை மாற்று, ஆரோக்கியமான நிர்வாக சூழலை எற்படுத்தி கடமையாற்ற விடு, உயர் அதிகாரியே அடிமைத்தனம் செய்யாதே, அராஜக நிர்வாகத்தை திணிக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த ஊழியர்களின் நீதியினை பெற்றுதர கோரி எட்டு அம்சங்களை உள்ளடக்கிய மகஜரும் யாழ். மாவட்ட செயலக அரசாங்க அதிபர் க.மகேசன் (K.Magesan) மற்றும் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவிடம் கையளிக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட தபாலக தொழிற்சங்க தலைவர் ஆறுமுகம் சுபாகரன் (Arumugam Subhakaran) தெரிவித்துள்ளார்.







