நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் தபால் மூல வாக்களிப்புக்கள்
2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பானது இன்றையதினம் இடம்பெற்று வருகிறது.
மானிப்பாய்
அந்தவகையில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்திலும், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குணதிலகவின் கண்காணிப்பின் கீழ் தபால் மூல வாக்களிப்புக்கள் இடம்பெற்றன.
செய்தி - கஜி
மட்டக்களப்பு
அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூல வாக்களிக்கும் பணிகள் அமைதியான முறையில் திணைக்களங்களில் நடைபெற்று வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள திணைக்களங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் இன்று காலை தொடக்கம் வாக்களிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முட்டக்களப்பின் புதிய மாவட்ட செயலகம் உட்பட அனைத்து பிரதேச செயலகங்கள் திணைக்களங்களில் இன்று காலை முதல் அரச ஊழியர்கள் வாக்களிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 11554 அரச ஊழியர்கள் அஞ்சல் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரியுமான ஜஸ்ரீனா முரளிதரன் தெரிவித்தார்.
இன்றும் நாளை வெள்ளிக்கிழமையும் அரச ஊழியர்கள் வாக்களிக்கமுடியும் எனவும் அதில் தவறுவோர் எதிர்வரும் 28,29ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
செய்தி - குமார்
நுவரெலியா
2025ஆம் ஆண்டு உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் பொலிஸார், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் 24.04.2025 அன்றும், 25.04.2025 அன்றும் தபால் மூலம் வாக்களிக்க முடியும்.
அந்தவகையில், மலையகத்தில் 24.04.2025 அன்று காலை வேளையிலேயே பொலிஸார் வாக்களிக்க ஆரம்பித்தனர்.
24.04.2025 அன்று காலை ஆரம்பித்த வாக்களிப்பில் நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பொலிஸார் சென்று வாக்களித்து வருகின்றனர்.
செய்தி - திருமால்
கிளிநொச்சி
உள்ளூராட்சி சபைத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று நடைபெறுகின்ற நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் பொலிஸ் நிலையங்கள் மற்றும் மாவட்ட செயலகங்களில் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள் வாக்களித்து வருகின்றனர்.
செய்தி - தேவந்தன்
வவுனியா
வவுனியா மாவட்டத்தில் இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகிய வாக்களிப்பு செயற்பாடுகள் சுமூகமாக நடைபெற்று வருகிறது.
வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டசெயலகம் உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,இராணுவத்தினர்,ஆசிரியர்கள் இன்றையதினம் தமது தபால்வாக்குகளை அளித்திருந்தனர்.
செய்தி - திலீபன்
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றையதினம் சுமூகமான முறையில் தபால்மூல வாக்களிப்பு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
முல்லைத்தீவில் 3807 பேர் தபால் மூலம் வாக்களித்கத் தகுதிபெற்றுள்ளனர்.
கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கான தேர்தலாக இது அமைவதுடன் 41 வட்டாரங்களை உள்ளடக்கி காணப்படுகின்றது.
மாவட்டத்தில் மொத்தமாக 87800 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதுடன் 137 வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.
செய்தி - கீதன்
திருகோணமலை
கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபை ஆகிய இரு உள்ளுராட்சி மன்றங்களுக்குமான தபால் மூலமான வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை(24) காலை ஆரம்பமானது.
கிண்ணியா வலய கல்வி அலுவலகம், கிண்ணியா பிரதேச செயலகம் ஆகியவற்றில், காலை 08.30 மணிக்கு, சுமூகமான முறையில் வாக்களிப்பு ஆரம்பமானது.
கிண்ணியா வலய கல்வி அலுவலகத்தில் 243 ஊழியர்களும், கிண்ணியா பிரதேச செயலகத்தில் 176 ஊழியர்களும் தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பித்திருந்தனர்.
அரச ஊழியர்கள், ஆர்வத்துடன் வாக்களிப்பில் கலந்து கொண்டதை காணக்கூடியதாக இருந்தது. கிண்ணியா நகர சபையின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக 9 அரசியல் கட்சிகளும், பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக 11 அரசியல் கட்சிகளும் போட்டியிடுகின்றன.
கிண்ணியா நகரசபையில் தேர்தல் மூலம் 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 27630 பேரும், கிண்ணியா பிரதேச சபையில் தேர்தல் மூலம் 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 25154 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றங்களிலிருந்து மொத்தமாக136 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். இதற்காக 319,399 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
திருகோணமலை மாநகர மற்றும் கிண்ணியா நகர சபை உட்பட, மூதூர், குச்சவெளி, கிண்ணியா, தம்பலகாமம், திருகோணமலை பட்டணமும் சூழலும், கந்தளாய், சேருவில, மொறவெவ, வெருகல், பதவிசிறிபுர, கோமராங்கடவெல ஆகிய பிரதேசிய சபைகளுமாக மொத்தம் 13 உள்ளுராட்சி மன்றங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - கியாஸ் ஷாபி
தம்பலகாமம்
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (24) இடம்பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் தலைமையில் இடம் பெற்ற குறித்த தபால் மூல வாக்களிப்பில் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர்.
அமைதியான முறையில் இடம் பெற்ற தபால் மூல வாக்களிப்பினை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர், உதவி தெரிவத்தாட்சி அலுவர் உள்ளிட்டோரும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
செய்தி - ரொஷான்





































