போராட்டத்தில் குதித்த தபால் தொழிற்சங்கம் - சேவைகளை பெற முடியாமல் மக்கள் பாதிப்பு (Photos)
யாழ்ப்பாணம்
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
குறித்த போராட்டம் தபால் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் செயற்பாட்டுப் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வு காணத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்தப் போராட்டமானது நாளை (12.10.2023) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேலைநிறுத்தப் போராட்டம்
27,000 தபால் ஊழியர்கள் இந்த அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
தபால் திணைக்களத்திற்கு சொந்தமான கட்டிடங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 653 தபால் நிலையங்கள், 3,410 உப தபால் நிலையங்கள் மற்றும் அனைத்து
நிர்வாக அலுவலகங்களும் முடங்கும் என்றும், சுமார் 27,000 தபால் ஊழியர்கள் வேலை
நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம்
தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சேவைகளைப் பெறுவதற்காக வட்டுக்கோட்டை தபால் நிலையத்துக்கு வருகை தந்த மக்கள், தபால் நிலையம் மூடப்பட்டுள்ளதை பார்த்து திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.
மட்டக்களப்பு
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி 48 மணித்தியால பணிப்புறக்கணிப்பை
மேற்கொள்ள விடுத்த அழைப்பின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள
தபாலகங்கள் மூடப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு பிரதான தபாலகம் இன்றைய தினம் (11.12.2023) மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
பொதுமக்கள் ஏமாற்றம்
இதன்காரணமாக பல்வேறு தேவைகள் நிமிர்த்தம் தபாலகங்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதை காணமுடிந்தது.
இன்றும் நாளையும் தபாலகங்கள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தபால் சேவையினை பெறவுள்ள மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
மேலதிக செய்திகள்: குமார்
மன்னார்
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி 48 மணித்தியால பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள விடுத்த அழைப்பின் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள தபாலகங்கள் இன்று (11) திங்கள் காலை முதல் மூடப்பட்டுள்ளன.
மேலும் மன்னார் பிரதான தபாலகம் இன்றைய தினம் (11) மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
பொது மக்கள் ஏமாற்றம்
தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக பல்வேறு தேவைகள் நிமித்தம் தபாலகங்களுக்கு வந்த பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதை காணமுடிந்தது.
இன்றும், நாளையும் (12) தபாலகங்கள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தபால் சேவையை பெறவுள்ள மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி உள்ளனர்.
மேலதிக செய்திகள்: ஆசிக்
நுவரெலியாவிலும் கண்டியிலும் உள்ள 100 வருடங்களைத் தாண்டிய புராதன தபால் நிலையங்களை விற்பனை செய்ய அரசாங்கம் முடிவெடுத்துள்ளமையை விலக்கிக் கொள்ள வேண்டும் மற்றும் அஞ்சலகப் பணியாளர்களுக்கு 20000 ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே இந்த பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் புராதன வரலாற்றைப் பிரதிபலிக்கும் விலைமதிப்பற்ற புராதனச் சொத்தாக நுவரெலியா தபால் நிலையக் கட்டிடத் தொகுதியை இலங்கையின் முதன்மை சுற்றுலா ஊக்குவிப்பு நிறுவனம் ஒன்றிற்கு விற்பனை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதை அடுத்தே அஞ்சல் தொழில் சங்கத்தினர் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
இப்பொழுது போராட்டத்தில் சம்பள உயர்வுக் கோரிக்கையும் இடம்பிடித்துள்ளது.
மேலதிக செய்திகள்: ருசாத்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |