இனி ஆடைகளும் கொள்வனவு செய்ய முடியாது! இலங்கை மக்களை திண்டாட வைக்கும் விலை உயர்வு
இலங்கையில் நாளாந்தம் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மற்றும் சேவைகளின் கட்டணங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாக இலங்கை வாழ் மக்களின் வாழ்வாதாரம் நாளுக்கு நாள் பாதிக்கப்படுகின்றது.
அந்த வகையில், மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக அனைத்து ஆடைகளின் விலைகளும் 30-31% வரை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மூலப்பொருட்களுக்கான 40 அடி கொள்கலனுக்கு கப்பல் நிறுவனங்கள் இதுவரை 200,000 ரூபாவை அறவிடுகின்றன.
ஆனால் தற்போது அது ஒரு மில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு பொருளாக இறக்குமதி செய்யும் போது சதுர அடிக்கு அறவிடப்படும் தொகை 6,000 ரூபாவிலிருந்து 25,000 ரூபாவை அண்மித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
தற்போதைய சூழ்நிலை காரணமாக உள்ளூர் ஆடைத் தொழில்துறை கடும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும், இதனால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பதாகவும் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.