நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல: ட்ரம்பிற்கு திருத்தந்தை லியோ பதிலடி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன்னை "குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் பலவீனமானவர்" என்றும், "வெளி விவகாரக் கொள்கையில் மோசமானவர்" என்றும் விமர்சித்ததற்கு, திருத்தந்தை லியோ XIV (Pope Leo XIV) அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், ட்ரம்ப் நிர்வாகத்தைக் கண்டு தான் அஞ்சவில்லை என்றும், நற்செய்தியின் செய்தியை உரக்கச் சொல்வதே தனது மற்றும் திருச்சபையின் பணி என்றும் குறிப்பிட்டார்.
இது குறித்த தகவல்களை ஊடகவியலாளர் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
வெளி விவகாரக் கொள்கை
"நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல; ஜனாதிபதி ட்ரம்ப் புரிந்துகொள்ளும் கோணத்தில் நாங்கள் வெளி விவகாரக் கொள்கைகளைக் கையாள்வதில்லை.
ஆனால், அமைதியை உருவாக்குபவர் என்ற முறையில் நற்செய்தியின் செய்தியில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது," என்று திருத்தந்தை லியோ தெரிவித்தார்.

முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் போரைத் திருத்தந்தை விமர்சித்ததைத் தொடர்ந்து, நேற்று முன்தினம்(12.4.2026) இரவு சமூக ஊடகப் பதிவு ஒன்றின் மூலம் டொனால்ட் ட்ரம்ப் இந்த வழக்கத்திற்கு மாறான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
வொஷிங்டன் மற்றும் வத்திக்கான் இடையிலான இந்த மோதல் சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.