உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு பாப்பரசர் லியோவின் வலியுறுத்தல்
உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் போரை முடிவுக்குக் கொண்டுவர நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் "துணிச்சலை" வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று பாப்பரசர் லியோ (Pope Leo XIV) வலியுறுத்தியுள்ளார்.
வத்திக்கானில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில், தனது முதலாவது கிறிஸ்துமஸ் உரையை வழங்கிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
"ஆயுதங்களின் முழக்கம் ஓயட்டும். சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன், சம்பந்தப்பட்ட தரப்பினர் நேர்மையான மற்றும் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் துணிச்சலைப் பெற வேண்டும்" என்று பாப்பரசர் வேண்டுகோள் விடுத்தார்.
மனிதாபிமான நெருக்கடி
காசாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி குறித்து கவலை தெரிவித்த அவர், அங்குள்ள மக்கள் கடும் குளிரிலும் மழையிலும் கூடாரங்களில் தங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

"பாலஸ்தீன மக்களின் துயரங்களையும், காசாவில் மழையிலும் காற்றிலும் நனைந்து கொண்டிருக்கும் கூடாரங்களையும் நாம் எப்படி நினைக்காமல் இருக்க முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நிலவும் எல்லை மோதல்களைக் குறிப்பிட்ட பாப்பரசர், இரு நாடுகளுக்கும் இடையிலான "பண்டைய நட்பு" மீண்டும் மலர வேண்டும் என்றும் சமாதானத்தை நோக்கி உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா தலைமையிலான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே இதுவரை நேரடிப் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், காசாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வரும் போர் மற்றும் குளிர்கால புயல்களால் சுமார் 2.1 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இஸ்ரேலிய எல்லைகளின் வழியாக கூடுதல் நிவாரணப் பொருட்களை அனுமதிக்க வேண்டும் என்று உதவி முகமைகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.
சிறகடிக்க ஆசை சீரியலில் புதிய என்ட்ரியால் ஷாக்கில் அண்ணாமலை குடும்பம்... மனோஜ் மாட்டிக்கொண்டாரா? Cineulagam