நுவரெலியா நகரையே உலா வரும் மட்டக்குதிரைகள்: வாகன ஓட்டிகள் விபத்து அச்சம்
நுவரெலியாவில் அண்மைக் காலமாக பிரதான வீதிகளில் சுற்றித்திரியும் மட்டக்குதிரைகளினால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.
அத்துடன் தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியிருப்பதால் வீதிகளில் மட்டக்குதிரையின் சாணம், சிறுநீரால் வீதியில் வழுக்குதன்மையும் அதிகரித்து விபத்துகளும் ஏற்படுகின்றன.
மட்டக்குதிரைகளை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து தயக்கம் காட்டுவதால் அதன் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உரிய நடவடிக்கை
நகரில் மற்றும் பிரதான வீதியில் திரியும் மட்டக்குதிரைகளை பிடித்து அதனை மாநகரசபைக்கு சொந்தமான இடத்தில் பாதுகாப்பாக கட்டப்பட்டு பராமரிக்க நடவடிக்கை எடுத்து அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும், நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கட்டுப்பாடின்றி உலா வரும் மட்டக்குதிரைகள் காரணமாக தற்போதைய காலக்கட்டத்தில், குறுகிய வீதியில் வாகனங்கள் செல்ல வழியின்றி அவதிப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல், ஆங்காங்கே மட்டக்குதிரைகள் மேய்வதும், அவைகள் வீதியில் தங்களுக்குள் சண்டையிட்டு வாகன ஓட்டிகளின் மீது மோதி கீழே விழச்செய்கின்றன.
எனவே மட்டக்குதிரைகளை வளர்ப்பவர்கள் தொழுவத்தில் பராமரித்து கொள்ள வேண்டும். பிரதான நகரில் அல்லது பிரதான வீதியில் சுற்றித்திரியாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுத்து மாநகரசபைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகர சபை முதல்வர் உபாலி வணிகசேகர தெரிவித்தார்.


