தமிழர் பகுதிகளில் களை கட்டியுள்ள பொங்கல் வியாபாரம்
தமிழர் திருநாளான தைப்பொங்கல் நாளை (15.01.2024) கொண்டாடப்படவிருப்பதை முன்னிட்டு, இலங்கை முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்கள் சந்தைகளில் பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.
யாழ். சாவகச்சேரி
இதனடிப்படையில், யாழ்ப்பாண மாவட்டம் சாவகச்சேரியிலும் மக்கள் பொருட்களை வாங்குவதற்காக சந்தைகளுக்கு செல்கின்றனர்.
வரி அதிகரிப்புக் காரணமாக விலை ஏற்றம், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட சவால்களுக்கு மத்தியிலும் மக்கள் ஆர்வத்துடன் பொங்கல் பொருட்களை கொள்வனவு செய்திருந்தததை அவதானிக்க முடிந்தது.
செய்தி : கஜிந்தன்
திருநெல்வேலி சந்தை
நாளை தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் பொங்கல் வியாபாரம் களைகட்டத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக, பொங்கல் பானை வியாபாரிகள், வெடி விற்பனையாளர்கள் சந்தையில்
குவிந்து வருகின்றனர்.
அதேவேளை, யாழ்ப்பாணத்தின் பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி சந்தைக் கடைகளிலும் இவ்வாறான நிலை காணப்படுகின்றது.
தலைநகரிலும் களைகட்டிய பொங்கல்
ஏனைய பிரதேசங்களை போன்று தலைநகரான கொழும்பிலும் பொங்கல் சந்தை களை கட்டியுள்ளது.
ஆங்காங்கே உள்ள விற்பனை நிலையங்களில் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்கின்றமையை அவதானிக்க முடிந்தது.
மட்டக்களப்பில் பொங்கல் வியாபாரம்
மட்டக்களப்பு மாவட்டத்திலும் மக்கள் பொருட் கொள்வனவு செய்வதில் மும்முரம் காட்டி வருவதை காணமுடிகின்றது.
இந்நிலையில், மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி, பட்டிருப்பு, களுதாவளை, கல்லாறு உள்ளிட்ட பல பகுதிகளிலும் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் மக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்து வருகின்றனர்.
மன்னார்
உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வரும் நிலையில் வவுனியாவில் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது.
நாளையதினம் உழவர் தினமான தை முதலாம் திகதி பிறக்கவுள்ள நிலையில் தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற வாக்கிற்கிணங்க தைப்பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்டாடவுள்ளனர்.
வவுனியா நகரப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதுடன் பொங்கலுக்கு தேவையான பானை, அகப்பை, கரும்பு, பட்டாசு, பழவகை என்பவற்றின் விற்பனை சூடு பிடித்துள்ளது.
தைப்பொங்கல் திருநாள் நாளையதினம் (15.01.2024) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவில் தைப்பொங்கல் பண்டிகை களைக்கட்ட ஆரம்பித்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.
செய்தி - திலீபன்
கிளிநொச்சியில் ஆர்வமில்லாத நிலை
கிளிநொச்சியில் தைப்பொங்கல் தினத்தை கொண்டாத்தில் மக்கள் ஆர்வமில்லாத நிலை கானப்படுகின்றன.
அதாவது இன்றைய தினம் பொருட்கள் கொள்ளளவுகளில் ஈடுபடுவோர் மிகக் குறைவாகவே காணப்படுகின்றனர் குறிப்பாக பொருளாதார நெருக்கடி விவசாயத்தில் ஏற்பட்ட பாதிப்பு வறுமை என்பன காரணமாக மக்கள் பொங்கலில் நாட்டம் காட்டவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி - யது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |