பொலன்னறுவையில் பலரை பலியெடுத்த கோர விபத்து:உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
பொலன்னறுவை - மனம்பிட்டி பகுதியில் நேற்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் சிலரின் அடையாளங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
விபத்தில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உட்பட பத்து ஆண்களும், ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளதாக மனம்பிடிய பொலிஸ் நிலைய கட்டளைத்தளபதி அசேல சரத் குமார தெரிவித்துள்ளார்.
மேலும், பொரவெவ வெலிகந்த பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இளைஞனும் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் தனியார் துறையில் பணிபுரிந்து வரும் இளைஞன் தனது பாட்டியின் மரண வீட்டிற்கு செல்வதற்காக தனது பெற்றோருடன் பேருந்தில் சென்ற நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சடலங்கள் மீதான பிரேத பரிசோதனை
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் கல்முனை மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும், உயிரிழந்தவர்களில் சிலரின் தகவல்கள் உறுதி செய்ய முடியவில்லை எனவும், இவர்களது சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பேருந்து விபத்தில், மனம்பிடிய பொலிஸார், இராணுவம், விசேட அதிரடிப்படையினர், கடற்படையினர் உட்பட பிரதேசவாசிகள் சுமார் 3 மணித்தியாலங்கள் இணைந்து பேருந்தில் சிக்கி காயமடைந்த சுமார் 41 பேரை மீட்டு மனம்பிடிய மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதித்திருந்தனர்.
பேருந்து சாரதியின் கவனக்குறைவே இந்த விபத்திற்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளதாக மனம்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீதி அனுமதிப்பத்திரம்
பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வாவின் பணிப்புரையின் பேரில் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக கொமாண்டோ படை, மாதுரு ஓயா மற்றும் வெலிகந்த இராணுவ முகாமின் நீச்சல் பிரிவுகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரும் இணைந்து விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த தனியார் பேருந்திற்கு வடமத்திய மாகாண வீதிகளில் ஓட்டுவதற்கான வீதி அனுமதிப்பத்திரம் இல்லை என்பது விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில் கதுருவெல மற்றும் மனம்பிடிக்கு இடையில் இவ்வாறான பாதுகாப்பற்ற இரண்டு மேம்பாலங்கள் காணப்படுவதுடன், இந்த பிரதான வீதியில் பயணிக்கும் மக்களின் உயிருக்கு பாதுகாப்பு வழங்குமாறும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |