கட்டமைப்புவாத இனப்படுகொலை முறைமைக்குள் தமிழ் மக்களின் அரசியல்
இலங்கைத் தீவு ஒரு ஜனாதிபதி தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் இன்றைய சூழலில் தமிழ் மக்களின் அரசியல் என்பது தீர்க்கமான எந்த முடிவுகளையும் எட்டாத திரிசங்கு நிலையில் தொங்குகிறது. கடந்த ஒரு நூற்றாண்டு கால ஜனநாயக அரசியலில் சிங்கள தலைவர்களினால் தொடர்ந்து ஏமாற்றப்பட்ட தமிழ் தலைவர்களின் வரிசையில் இன்றைய தமிழ் தலைவர்களும் தம்மை இணைத்துக் கொள்ள முண்டியடிப்பதாகத் தோன்றுகிறது.
சிங்களத் தலைவர்கள் திருந்தி விட்டார்கள், இப்போது உண்மையை உணர்ந்து விட்டார்கள், கடந்த காலத் தலைவர்கள்தான் ஏமாற்றி விட்டார்கள், அவர்கள் தவறு இழைத்து விட்டார்கள், அவற்றையெல்லாம் மறந்து புதிய இலங்கையை உருவாக்குவோம், தமிழர்களும் சிங்களவர்களும் கலந்து மனம்விட்டு பேசினால் பிரச்சினை தீர்ந்துவிடும், சிங்களவர்களும் தமிழர்களும் பிரிந்து நின்று பேசினால்தான் பிரச்சினை.
இப்போது சிங்களவர்கள் கீழ்ழிறங்கி வந்து பேசத் தயாராக உள்ளனர். நாம் பேசித்தான் பார்ப்போம். சிங்களவர்கள் மனம் திரும்பி குணப்பட்டு விட்டார்கள் என்றெல்லாம் இன்று சிங்கள தரப்பு அரசியல் ஆசாமிகள் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்.தமிழ் தரப்பு ஏமாளிகளும் கம்யூனிசிய குஞ்சுகளும் இதை அப்படியே விழுங்கி பிதற்ற தொடங்கி விட்டார்கள்.
இந்த இடத்தில் இலங்கையின் ஒற்றை ஆட்சி அரசியல் கலாச்சாரத்தில் இன ஒழிப்பு கட்டமைப்பு வாதமும் (structural genocide) அதன் வரலாற்றுப் போக்கு பற்றிய புரிதல் அவசியமானது.
அரசியல் கலாச்சாரம்
இலங்கை அரசியல் கலாச்சாரம் என்பது தேரவாத பௌத்த தத்துவ நூலான "மகா மகாவம்ச"மகாநாம தேரரின் வாயிலான இனக்குரோத வாதமாக வெளிப்பட்டு நிற்கிறது. அது தமிழின பரிசீலனை , இந்திய எதிர்ப்பு என தத்துவத்தை முன்வைக்கிறது. பௌத்தத்தை பாதுகாப்பதற்கு இலங்கை தீவில் தமிழினத்தை இல்லாது ஒழிக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
இதனை "தம்மதீபக்" கோட்பாட்டின் மூலம் நியாயப்படுத்துகிறது. இந்த கோட்பாட்டின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை (structural genocide) கட்டமைப்பு வாதத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் இனப்படுகொலை கட்டமைப்பு வாதம் என்பது தனி ஒரு மகாநாம தேரரினாலோ அல்லது சில மனிதனாலோ மட்டும் கட்டமைப்புச் செய்து வளர்க்கப்பட்டதல்ல.
இது ஒரு நீண்ட வரலாற்று வளர்ச்சியில் (Historical development) வடிவம் பெற்று ஒரு முறைமைக்கு (System) உட்படுத்தப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும்.
சிங்கள பௌத்த மேலாண்மைவாத அரசியல் முறைமைக்குள் இனப்படுகொலை கட்டமைப்பு வாதம் இறுக்கமாக கட்டமைப்புச் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய இனப்படுகொலை முறைமைக்குள் இலங்கை தீவில் உள்ளே தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் விருப்புக்கள் அல்லது அபிலாசைகள் பூர்த்தி செய்வதற்கு சிங்கள தேசத்தின் அரசியலில் கட்சிகளோ தலைவர்களோ தயாரா?
இவை எல்லாவற்றிக்கும் மேலான அரச இறைமையை பிரயோகிக்க வல்ல பௌத்த மகா சங்கம் இடமளிக்குமா? இனப்படுகொலை கட்டமைப்பு வாதம் அரச இயந்திரம் இதற்கு அனுமதிக்குமா? இன்று நிலவும் இலங்கையின் ஒற்றை ஆட்சி அரசியல் முறைமைக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு கிட்டுமா? ஒற்றை ஆட்சி முறமையை மீறி எந்த ஒரு சிங்களத் தலைவர்களாலும் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வையும் முன்வைக்க முடியாது என்பதை ஈழத்தமிழர் யதார்த்த பூர்வமாக உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம் இது.
உலகளாவிய வரலாற்றில் நிகழ்ந்த அனைத்து இனப்படுகொலைகளும் ஒரு தத்துவார்த்த அடித்தளத்தையோ (Philosophical base) அல்லது கோட்பாட்டு தளத்தையோ (theoretical base) கொண்டிருந்தன. இது ஒரு வரலாற்று வளர்ச்சிப் போக்கின் தொடர் விளைவுகளின் அறுவடையாகவே நிகழும்.
வரலாற்று வளர்ச்சிப் போக்கு
ஒரு இனத்தின் மீது இன்னொரு இனத்தின் குரோதம் என்பது தனி மனிதர்களால் ஒரு சில நாட்களிலோ சில வருடங்களிலோ ஏற்படுத்திவிட முடியாது. இது ஒரு வரலாற்று வளர்ச்சிப் போக்கில் கட்டமைப்பு பெறும். அது அந்தச் சூழலின் யதார்த்தமாக இருக்கும்.
சூழலின் யதார்த்தம் அந்தச் சூழலில் ஏற்படுகின்ற தொடர் நிகழ்வுகளின் போக்கின் விளைவு என்பதைக் கருத்துக் கொள்ள வேண்டும். எனவே இனப்படுகொலையை தத்துவம் (Philosophy) கோட்பாடு (Theory) என்ற இரண்டிலிருந்தும் பிரித்தெடுக்க முடியாது.
கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை (structural genocide) என்பது ஒரு முறைமை(system). எங்க இந்த முறைமை இருக்கிறதோ அங்கு அதற்கான ஒரு தர்க்கம்(logic) இருக்கும். எங்கு தர்க்கம் இருக்கிறதோ அதற்கு ஒரு தர்க்க ரீதியான செயல்முறை (logical process) இருக்கும். அந்தச் செயல்முறை தர்க்க ரீதியான வளர்ச்சியை (logical development) கொண்டிருக்கும்.
இத்தகைய நீண்ட வரலாற்றைக் கொண்ட இனப்படுகொலை கட்டமைப்பு வாதம் இலங்கை தீவில் கிபி 6ஆம் நூற்றாண்டில் இருந்து தொடர் வளர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.
அத்தகைய தொடர் வளர்ச்சி போக்கின் விளைவாக தோற்றம் பெற்றதுதான் இன்றைய சிங்கள பௌத்த மேலாண்மைவாத அரசியல் முறைமை. இந்த அரசியல் முறைமையை இலகுவில் எந்த கொம்பனாலும் மாற்றிட முடியாது. யாரும் மாற்றவும் முனைய, துணிய மாட்டார்கள். இந்த யதார்த்தத்தில் இருந்துதான் தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகள் பற்றி சிந்திக்கவும், பேசவும் வேண்டும்.
இலங்கை - இந்திய புவிசார் அமைவிட அடித்தளம்தான் இலங்கையின் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை அரசியலின் அச்சாணியாக உள்ளது. இந்தப் பிராந்தியத்தின் புவிசார் கட்டமைப்பு (geographical structure) நிலையானது. இந்தப் புவியியல் அமைவிடம் இனப்படுகொலை கலாச்சாரத்தை தோற்றுவிப்பதற்கான முதன்மை காரணி ஆகவும் உள்ளது.
அடுத்ததாக இப்பிராந்தியத்தில் நிலவும் அரசியல் கட்டமைப்பு (Political structure) இரண்டாவது காரணியாக உள்ளது. இந்த இரண்டு காரணிகளும் இணைகின்ற போது புவிசார் அரசியல் (Geopolitics) என்ற அரசியல் வாதம் செல்வாக்கு செலுத்த முனைகிறது. இந்த புவிசார் அரசியல் மடிக்கணினி போட்டியில் இலங்கை அரசும், இந்திய அரசும் மோதுகின்றன.
ஈழத் தமிழினம்
இந்த மோதலுக்குள் ஈழத் தமிழினம் இரண்டுக்கும் இடையில் அகப்பட்டு நசிந்து அழிவைச் சந்திக்கிறது. இந்தியாவின் புவிசார் அரசியல் மேலாண்மையை இலங்கைதீவில் இருந்து அகற்றுவதற்கு அல்லது தமக்கு சாதகமாக மாற்றுவதற்கு ஈழத் தமிழரை இலங்கை தீவில் இருந்து அகற்றுவதே சரியானது என கடந்த 14 நூற்றாண்டுகளாக இலங்கை பௌத்த பேரினவாத அரசு நம்புகிறது.
இந்த புவிசார் அரசியலை தமக்கு சாதகமாக திருப்புவதற்காகவே இலங்கை அரசு இனப்படுகொலையை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது. இத்தகைய தொடர் வரலாற்று வளர்ச்சி ஊடான இனப்படுகொலை இன்று கட்டமைப்பிற்கு உட்படுத்தப்பட்ட வடிவம் பெற்று இலங்கை தீவின் அரசியலில் தவிர்க்க முடியாத கோட்பாடாக, தத்துவமாக நிலை பெற்றுவிட்டது.
இந்த தத்துவார்த்த உண்மையை (Philosophical truth) புரிந்து கொள்ளாமல் தமிழர் அரசியலை ஒரு அடிதானும் நகர்த்த முடியாது. மாறாக சிங்கள தரப்புடன் சமரசம் பேசுவோமேயானால் தொடர்ந்து சீரழிந்து ஈழத் தமிழினம் தனது தாயகத்தை இழக்க நேரிடும்.
ஈழத் தமிழர்கள் முற்றிலும் அறிவுபூர்வமாக சிந்திக்கவும் செயல்படவும் வேண்டிய காலம் இது. எனவே தமிழர் தாயகத்தில் காணப்படுகின்ற யதார்த்தம் (Given reality), ஈழத் தமிழர்களின் வாழ்விடத் தாயகத்தின் உலகளாவிய அரசியலின் புவிசார் கேந்திர முக்கியத்துவம் (Geo-strategic importance) என்பவற்றை கருத்தில் கொண்டு தமிழ் மக்களுக்கான அரசியலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
வெறுமனே ஒத்தோடி அரசியலையோ, அடிபணிவு அரசியலையோ, ஓடுகாலி அரசியலையோ, சோம்பேறித்தனமான அரசியலையோ விடுத்து முற்றிலும் அறிவு சார்ந்து ஈழத் தமிழினத்திற்கு அதன் தாயாக அமைவிடம் சார்ந்து இருக்கின்ற உலகளாவிய முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும் இலங்கை இனப்படுகொலை அரசை எவ்வாறு வெற்றி கொள்ள முடியும் என்பதை நுண்மான் நுழைபுலத்தோடு அணுக வேண்டும்.
இலங்கையின் சிங்கள இடதுசாரிகள் தமிழ் மக்களுக்காக பரிந்து பேசிய ஒரு காலம் இருந்தது. ஆனாலும் அந்தக் காலகட்டத்தில் அவர்களால் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்திட முடியவில்லை. அது மட்டுமல்ல அவ்வாறு தமிழ் மக்களுக்காக பரிந்து பேசியவர்கள் பின்னாளில் அந்தக் பஜ்ஜி கொள்கையில் நின்றுபிடிக்கவும் முடியவில்லை. மாறாக தமிழர்களை அழிக்கும் செயற்திட்டங்களை உருவாக்கினார்கள், ஒத்துழைத்தார்கள்.
அரசியல் முறைமை
இவ்வாறே சிங்கள முற்போக்கு தலைவர்கள் என வந்தவர்களும் தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நடைமுறைப்படுத்த முடியவில்லை. சிங்கள தலைவர்களால் தமிழ் மக்களுக்கு எதனையும் வழங்கிட முடியவில்லை என்பதனை ஒரு வரலாற்று தத்துவார்த்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்.
அதற்கு ஒரு வரலாற்று தத்துவார்த்த, கோட்பாட்டியல் செல்நெறி உள்ளது என்பதை இனங்காண வேண்டும். இனப்படுகொலை முறைமைக்கு உட்படுத்தப்பட்ட இலங்கைத்தீவின் அரசியலில் எந்த ஒரு தனிமனித படகு அரசியல் தலைவர்களினாலோ, அல்லது ஒரு அரசியல் கட்சியினாலோ தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்க முடியாது.
அவ்வாறு வழங்குவதற்கு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை அரசியல் முறைமை ஒருபோதும் இடம் அளிக்காது. இத்தகைய கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை அரசியலை அதற்குரிய நடைமுறை அர்த்தத்தில் புரிந்துகொள்ளாமல் வெறுமனே சிங்களத் தலைவர்களின் தேர்தல் வேட்டையாட்டத்திற்கு உட்பட்டு அலந்த நாய் மலத்தில் வீழ்தது போல சிங்களத் தலைவர்களுக்குப் பின்னால் ஓடிக் குடைபிடிப்பது அழிவுக்கான அரசியலேயாகும்.
எனவே தமிழ் மக்கள் இங்கே அறிவு பூர்வமாக செயற்பட்டு சிங்கள தலைவர்களையும், சிங்களக் கட்சிகளையும், சிங்கள தேசத்தையும் நெருக்கடிக்குள் தள்ளுவதன் மூலமே தமிழ் மக்களுக்கான தீர்வு எட்டப்படும் என்பதுதான் வரலாற்று உண்மை. இந்த உண்மையில் இருந்து இன்று இலங்கைத்தீவு எதிர்நோக்கி இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலை தமிழர்கள் எதிர்கொள்ள வேண்டும்.
சிங்கள தேசத்தின் தலைவனை தெரிவு செய்வதற்கு தமிழ் மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்? சிங்கள தேசத்தின் தலைவனை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலில் சிங்களத் தலைவர்கள் யாரும் இலகுவில் வெற்றி பெறுவது என்பது கடினமானதாக இருக்கப் போகிறது.
இன்று சிங்களதேசத்தின் அரசியலில் மும்முனைப் போட்டி இருப்பதாக பலர் சொல்லத் தலைப்படுகின்றனர். மும்முனைப் போட்டி இருப்பதாக வெளிப்பார்வைக்கு தோன்றினாலும் உண்மையில் அங்கு இருமுனைப் போட்டியே உள்ளது.
பொது வேட்பாளர்
இந்த உலகில் மூன்று அணிகள் என்ற ஒரு நிலை ஒருபோதும் இருந்தது கிடையாது. உண்மையில் அங்கு இரண்டு அணிகளே இருக்கும். மூன்றாவது அணி என்பது வெற்றி பெறும் அணியை சார்ந்ததாகவோ அல்லது ஓர் அணியை தோற்கடிப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட அணியாகவே இருக்கும்.
ஆகவே இங்கே இரண்டு அணிகள் மட்டுமே இருக்கும். உலகளாவிய அரசியலிலும், மனிதகுல வரலாற்றில் எப்போதும் இரண்டு அணிகளே இருந்துள்ளன. இது இன்றைய சிங்களதேச அரசியலுக்கும் பொருந்தும்.
தமிழ் மக்கள் தமக்கான ஒரு தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்குவதற்கும், தமிழர்களுக்கான தலைமையை உருவாக்குவதற்கும் ஏற்ற ஒரு அரசியல் சூழல் இந்த ஜனாதிபதி தேர்தல் மூலம் விரிந்து கிடக்கிறது.
எனவே தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் இறைமையை தமிழ் வேட்பாளருக்குரிய வாக்குகளாக பிரயோகித்து தமது வாக்கை தமிழ் பொது வேட்பாளருக்கு அளிக்க வேண்டும். சிதைந்துபோயிருக்கும் தமிழீழழ மக்களை இதன் வாயிலாக ஒரு தேசியச் சக்தியாகத் திரட்டி எடுக்க முடியும்.
அத்துடன் இதனை தமிழ் தேசிய இனத்தின் மக்கள் ஆணையாக வெளி உலகத்திற்கு காட்டவும் முடியும். அதனையே ஒரு சர்வதேச அரசியல் செயற்பாட்டுக்கு மூலதனமாக முன்வைக்கவும் முடியும்.
தமிழ் மக்களின் எதிர்கால அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு தமிழ் வேட்பாளரை முன்னிறுத்துவதன் மூலம் தமிழ் மக்களுக்கான புதிய அரசியல் வழி ஒன்றை திறக்க முடியும் அதுவே இன்றைய காலத்தின் தேவையாகவும் உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |