இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்... அரசியல்வாதிகளின் ஆரூடம் (Video)
எரிபொருள், எரிவாயு, உணவு மற்றும் பல அத்தியாவசிய தேவைகளின் தட்டுப்பாட்டின் காரணத்தினால் இன்று இலங்கை வாழ் மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இலங்கை மக்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து இருந்தனர். இதில் பல்வேறு கலவரங்கள் உண்டான நிலையில் சிலர் போராட்டத்தில் தமது உயிரை இழக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
இவற்றை தொடர்ந்து, தொடர் போராட்டங்களின் பிரதிபலனாக நாட்டின் பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவி விலகியிருந்தனர். ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். எனினும் மக்கள் அதனை இன்னும் எதிர்த்த வண்ணமே உள்ளனர்.
இவற்றிற்கு மத்தியில், நாளைய தினம் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. ஜனாதிபதி பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதற்கான வேட்புமனுக் கோரல் நாடாளுமன்றில் இன்று (19) இடம்பெற்றிருந்தது.
தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
மேலும், புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை காலை 10 மணிக்கு இடம்பெறும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க சபையில் அறிவித்தார். நாளைய தேர்தல் தொடர்பில் நாம் நாடாளுமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொண்ட வேளை அவர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
வடிவேல் சுரேஸின் கருத்து
டலஸ் அழகப்பெரும ஜனாதிபதி ஆக்கப்பட்டால், 20வது திருத்தச் சட்டம் நீக்கப்பட்டு 19வது திருத்தச் சட்டம் இலங்கையில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
"இன்று நம் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் எடுத்த முடிவு பல கலந்துரையாடல்களின் பின்பே எடுக்கப்பட்டது. இது ஒரு தனி நபர் முடிவு அல்ல, மாறாக கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்டு அனைவரினதும் இணக்கத்திற்கேற்பவே எடுக்கப்பட்டது. தற்போது பல கட்சிகள் எம்மை ஆதரிக்கின்றன.
இதனை தொடர்ந்து, டலஸ் அழகப்பெரும மற்றும் சஜித் பிரேமதாஸ இணையும் போது நாடாளுமன்றத்தில் நமக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. நாட்டை கட்டியெழுப்ப, டலஸ் அழகப்பெரும ஜனாதிபதியாகவும் சஜித் பிரேமதாஸ பிரதமராகவும் தெரிவு செய்யப்பட வேண்டும்.
மேலும், டலஸ் அழகப்பெரும ஜனாதிபதி ஆக்கப்பட்டால், 20வது திருத்தச் சட்டம் நீக்கப்பட்டு 19வது திருத்தச் சட்டம் இலங்கையில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். ஜனாதிபதியின் அதிகாரங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு பிரதமருக்கு மேலதிக அதிகாரங்கள் கொடுக்கப்படும்.
நாட்டில் உள்ள பல கட்சிகள் முன்னாள் ஜனாதிபதியை பதவி விலக செய்ய வைக்க போராடியது. இதனை தொடர்ந்து, மக்கள் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்ய நாம் நடவடிக்கை எடுப்போம். புது பொறிமுறைகளை கையாண்டு வெளிநாட்டு ஆதரவினை பெற்றுக்கொள்வோம்.
ரணில் அல்லது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் யார் ஜனாதிபதி ஆனாலும் எம்மால் வெளிநாட்டு ஆதரவினை நம்மால் பெற்றுக்கொள்ள முடியாது" என அவர் தெரிவித்தார்.
க.வி.விக்னேஸ்வரனின் கருத்து
எமது கோரிக்கைகளை நிறைவேற்றும் நபருக்கு எமது ஒத்துழைப்பு முழுமையாக கொடுக்கப்படும் என தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர், க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
"நேற்று (19) சஜித் பிரேமதாஸவுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் நாம் நமது 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தோம். அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். எனினும், அவர் தரப்பிலான முடிவுகள் எமக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை.
இதனை தொடர்ந்து, இன்று (19) ரணில் விக்ரமசிங்க என்னை சந்தித்த போது எமது கோரிக்கைகளை அவரிடத்தில் முன்வைத்தோம். அவரும் அவற்றைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக கூறியுள்ளார். இருப்பினும் அவருடைய இறுதி முடிவுகள் இன்னும் வரவில்லை.
இந்நிலையில், டலஸ் அழகப்பெரும இன்னும் என்னை சந்திக்கவில்லை. சந்தித்தால் அவருடனும் பேசி எங்கள் கோரிக்கைகளை முன்வைத்து, அவர்கள் முடிவு கூறியதன் பின் யாருக்கு ஆதரவு வழங்குவது என்ற எங்கள் முடிவு எடுக்கப்படும்" என்றார்.
மனோ கணேசனின் கருத்து
நாளை நாடாளுமன்றத்தில் (20) இடம்பெறும் தேர்தலில், தமிழ் மற்றும் முஸ்லீம் கட்சிகளின் வாக்களிப்பு பெரும் பங்கு வகிக்கும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,
"அனுர குமார திஸாநாயக்காவின் போட்டியை தவிர்த்து ரணில் மற்றும் டலஸ் மத்தியில் இருக்கும் போட்டி கடுமையாக இருக்கும்.
மேலும், 20வது திருத்தச் சட்டம் நீக்கப்பட்டு 19வது திருத்தச் சட்டம் இலங்கையில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் பிரதமரின் அதிகாரங்கள் பலப்படுத்தப்படும்.
எனினும், தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்கள் முடிவுகளை இன்னும் அறியப்படுத்தவில்லை. நடுநிலை வகிக்கலாம் அல்லது வாக்களிப்பில் பங்கேற்காமலே போகலாம். சில நேரங்களில் அவர்கள் ரணிலுக்கு அல்லது டலசுக்கு வாக்களிக்கலாம். சில நேரம் இருவருக்கும் வாக்களிக்காது அனுர குமாரவிற்கு வாக்களிக்கலாம்," என அவர் கூறினார்.
பிமல் ரத்நாயக்கவின் கருத்து
எதிர்கால அரசியல் திட்டங்கள் இல்லாத ஒருவர் நாட்டின் ஜனாதிபதி பதவியை ஏற்கக்கூடாது என ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,
"முன்னாள் பிரதமரின் ராஜினாமாவிற்கு பின் நம் கட்சி சார்பாக நாட்டின் நலன் கருதி நாம் சில யோசனைகளை முன்வைத்தோம். அதில் முதல் யோசனையாக அமைந்தது, குறுகிய காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதே.
மேலும், எதிர்கால அரசியல் திட்டங்கள் இல்லாத ஒருவர் நாட்டின் ஜனாதிபதி பதவியை ஏற்கக்கூடாது. ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் முழுமையாக அரசாங்கத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும். அது நடக்காத வரை மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது.
மேலும், ஜனாதிபதி தேர்தலில் ரணில் வெற்றி பெற்றாலோ டலஸ் வெற்றி பெற்றாலோ அது ராஜபக்ச அரசாங்கத்திற்கு சாதகமாகவே அமையும்," என அவர் சுட்டிக்காட்டினார்.
வேலுசாமி இராதாகிருஷ்ணனின் கருத்து
எமது தலைவர் மற்றும் டலஸ் ஒன்றிணைந்துள்ளது எமக்குள்ள வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது என வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,
"தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவும் எமக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். இன்று வரை, முஸ்லீம் கட்சிகள் மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி வந்த ஒரு சிலரும் எமக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், தனிப்பட்ட ரீதியாக டலஸ் பக்கம் 40 ற்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் உள்ளார்கள்" எனவும் தெரிவித்தார்.
செல்வராஜா கஜேந்திரனின் கருத்து
யார் போட்டியிட்டாலும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பவரே ஜனாதிபதியாக வர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,
"எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்களை நாங்கள் ஆதரிக்க மாட்டோம். 2019 ஆம் ஆண்டு தேர்தல் காலகட்டத்தில், நமது 13 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டிருந்தன.
எனினும் சஜித் பிரேமதாச உட்பட அவ்வேளையில் போட்டியிட்ட நபர்கள் எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. சஜித் பிரேமதாச மற்றும் அனுரா குமராவிடம் நேற்று (18) நடத்திய பேச்சு வார்த்தைகளின்படி அவர்கள் நம் கோரிக்கைகளை நிறைவேற்ற தயாராக இல்லை.
எங்கள் கோரிக்கைகளை பூர்த்தி செய்வோம் என்று யாராவது முன் வந்தால் நாம் அவர்களை ஆதரிப்போம்," என அவர் தெரிவித்தார்.





ட்ரம்பால் 25 பில்லியன் டொலர் வருவாயை இழக்கும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள ஆசிய நாடொன்று News Lankasri
