வீடுகள் மற்றும் சொத்துக்களை காப்புறுதி செய்ய ஆர்வம் காட்டும் அரசியல்வாதிகள்
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வீடுகள் மற்றும் சொத்துக்களை காப்புறுதி செய்வதற்காக தற்போது காப்புறுதி நிறுவனங்களை நாடி வருவதாக தெரியவருகிறது.
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி நாடு முழுவதும் ஏற்பட்ட கலவரமான சூழ்நிலையில், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் கலவரத்தில் ஈடுபட்டவர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டன.
இந்த சம்பவங்களை அடுத்து ஆளும் தரப்பில் அங்கம் வகிப்போர் தமது வீடுகள், சொத்துக்கள், வர்த்தக நிலையங்கள் உட்பட ஏனைய சொத்துக்களை காப்புறுதி செய்வது தொடர்பில் கூடுதல் கவனத்தை செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
அச்சத்தில் அரசியல்வாதிகள்
நாட்டில் தற்போது நிலவும் குழப்பான சூழ்நிலையில், மக்கள் கடும் ஆத்திரத்தில் இருந்து வருவதாகவும் இதனால், மே 9 ஆம் திகதி மக்கள் எழுச்சி ஏற்பட்டால் தமது வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிந்து போக கூடும் என்ற அச்சம் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக ஏதேனும் ஒரு வகையில் தமது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படும் என்ற அச்சத்தில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அசையும் மற்றும் அசையா சொத்துக்களை காப்புறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியை சேர்ந்த சிலர் தமது வீடுகளின் பெறுமதி, வீட்டு மின் உபகரணங்கள்,இலத்திரனியல் உபகரணங்கள், தங்க ஆபரணங்கள், வீட்டுத் தளபாடங்கள் போன்றவற்றின் பெறுமதியை மதிப்பீடு செய்து, பிரதான காப்புறுதி நிறுனங்களிடம் காப்பீட்டை பெற்றுக்கொண்டுள்ளதாக காப்புறுதி நிறுவன முகவர் ஒருவர் கூறியுள்ளார்.
சில காப்புறுதி சான்றிதழ்களின் பெறுமதி மில்லியன் ரூபாவை தாண்டும் எனவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.