நள்ளிரவு வரை ரணிலை தேடிச் சென்ற அரசியல்வாதிகள்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விளக்கமறியல் உத்தரவின் பின்னர் நேற்று இரவு பல அரசியல்வாதிகள் மகசின் சிறைச்சாலைக்கு சென்று பல மணி நேரம் காத்திருந்ததாக தெரியவந்துள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் துமிந்த திசாநாயக்க, பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் உள்ளிட்ட ஆதரவாளர்கள் உள்ளிட்ட குழுவினர் அங்கு சென்றிருந்தனர்.
சிறைச்சாலைக்கு சென்ற போதிலும் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை, பின்னர் அவர்கள் சிறைச்சாலைக்கு வெளியே காத்திருந்ததாக தெரியவந்துள்ளது.
மருத்துவ ஆலோசனை
விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மருத்துவ ஆலோசனையின் பேரில் நேற்று இரவு சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக ரணில் விக்கிரமசிங்க சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவந்தது.
குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




