நாடு முடக்கப்படுமெனில் அன்றாட உழைப்பாளிகளுக்கு ஊதியம் வழங்க வேண்டும் - மனோ கணேசன்
நாடு முடக்கப்படுவதாக இருந்தால் கொழும்பு மாவட்ட மாநகர பிரதேசங்களைச் சார்ந்த அன்றாட உழைப்பாளர்களுக்கும் தினக்கூலி தொழிலாளர்களுக்கும் மத்திய தர வர்த்தக ஊழியர்களுக்கும் வாராந்த நிதி அல்லது உலர் உணவுப்பொதி நிவாரணம் வழங்க அரசு தன்னை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தமிழர் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மக்களுக்கு நிவாரணம் வழங்கப் பெருந்தொகை நிதி தேவைப்படும் என்பது உண்மை தான். அதேவேளை குடும்பத் தலைவர்களுக்கும் தலைவிகளுக்கும் தங்கள் குடும்பங்களைக் கொண்டு நடத்த, அவர்களது பிள்ளைகளை வாழவைக்க வேறு வழியில்லை என்பதை அரசு உணர வேண்டும்.
தடுப்பூசிகள் பெறுவதற்குப் பெருந்தொகை நிதி உதவிகள் உலக வாங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவை தந்து உதவின. பல நடப்பு நாடுகள் அன்பளிப்பாகத் தடுப்பூசிகளைத் தந்து உதவின. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிதி திரட்டப்பட்டுள்ளன .
குறிப்பாக எந்தவித வாய்ப்புகளும் இல்லாமல் வீட்டுத்தோட்டங்களும் இல்லாமல் கட்டிடங்களுக்கு மத்தியில் வாழும் மாநகர ஏழை மற்றும் மத்தியத் தர மக்களுக்கு நாட்டை மூடுவதானால் நிவாரணம் வழங்கியே ஆகவேண்டும். இதற்கான நிதியை அரசாங்கம் ஏனைய அபிவிருத்தி திட்டங்களை இடைநிறுத்தித் திரட்டியே ஆகவேண்டும்.
ஏற்கனவே விலைவாசி கணிசமாக உயர்ந்துவிட்டது. பல பொருட்கள் சந்தையில் இல்லை. இறக்குமதி பொருட்களும் இல்லை. இறக்குமதி வரி குறைக்கப்பட்டாலும் இறக்குமதியாளர் பொருட்களை இறக்குமதி செய்ய வங்கிகளில் அந்நிய செலாவணி இல்லை.
இதுதான் இன்றைய நிலைமை. நாடு முடக்கப்படும் போது ஐயாயிரம் ரூபாவை வாங்கிக்கொண்டு அதை வைத்து ஒரு மாதம் முழுக்க கொழும்பு மாநகர மக்கள் வள வேண்டும் எனக் கடந்த முறை அமைச்சர் விமல் வீரவன்ச பகிரங்கமாக நாடாளுமன்றத்தில் சொன்னார். இக்கருத்து தொடர்பில் நானும் நண்பர் முஜிபுர் ரஹ்மானும், விமல் வீரவன்சவுடன் சபையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டோம் .
பிறகு கொழும்பு மாநகர மக்களுக்கு வாராந்த நிதி மற்றும் உலர் உணவு பொதி நிவாரணம் வழங்கும் நிலைமை ஏற்பட்டது. அத்தகைய ஒரு நிலைமையை மீண்டும் ஏற்படுத்த வேண்டாமென இந்த அரசாங்கத்தை முன்கூட்டியே எச்சரிக்க விரும்புகிறேன்.
அரசாங்கம் செய்யும் அனைத்து அபிவிருத்தி உட்பட ஏனைய எல்லா செலவினங்களையும் இடை நிறுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் தயாராக வேண்டும், கொழும்பு மாநகரத்தை முடக்கி, கொழும்பில் வாழும் அன்றாட உழைப்பாளர், தினக்கூலி தொழிலாளர், மத்தியத்தர வர்க்க ஊழியர், குடும்ப குழந்தைகள், வயோதிபர் உட்பட மக்களைப் பட்டினி போடா அரசு முயலுமானால் அதைப் பார்த்துக்கொண்டு கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் இருக்கமாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.