எனது பயணத்திற்கு தடையேற்படுத்தும் நபர்கள் இருந்தால் கட்சியிலிருந்து வெளியேறலாம் - சஜித்
தனது பயணத்திற்கு தடையேற்படுத்தும் நபர்கள் இருப்பார்கள் எனில், அவர்களைக் கட்சியிலிருந்து விலகிக்கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை கிரிந்த பிரதேசத்தில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் சேவையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலத்தைப் போல், எனது வேலைத்திட்டங்களுக்குத் தடைகளை ஏற்படுத்த எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை. கடந்தகாலங்களில் நான் வேலைகளைச் செய்யும் போது காலை பிடித்து இழுத்தனர்.
இதுவரை காலமும் நான் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் அரசியலில் ஈடுபட்டு வந்தேன். எனக்கு வேலைகளைச் செய்ய இடமளிக்கவில்லை. காலை பிடித்து இழுத்தனர். இடையூறுகளை ஏற்படுத்தினர். என்ன பிரச்சினைகள் இருந்தாலும் நான் மக்களுக்குச் சேவை செய்ய உதவி ஒருவர் இருக்கின்றார் என்பதை நான் தெளிவாகக் கூற வேண்டும்.
அவர்தான் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அவரே எனக்கு முடிந்தவரை பலத்தைக் கொடுத்தார். தற்போது எனது கட்சிக்குள் எவரும் என் காலை பிடித்து இழுக்க முடியாது. அதற்கு இடமளிக்கப் போவதுமில்லை.
அப்படி காலை பிடித்து இழுக்கும் நபர்கள் இருந்தால், அவர்கள் வெளியில் சென்று தமது நடவடிக்கை மேற்கொள்ள முடியும் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.