மட்டக்களப்பு அரசியலை தீர்மானிக்கும் மண் மாபியாக்கள்: அமைச்சர் வியாழேந்திரனுக்கும் அழுத்தம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் கனிம வளங்களை அகழ்ந்து விற்பனை செய்வதில் அரசியல்வாதிகளுக்கு இடையே மிகுந்த போட்டி நிலவி வருகின்றது.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் அதிகாரத்தையும், மாவட்ட அதிகாரிகளையும் கொழும்பில் இருந்து வழிநடத்தும் செல்வாக்கு மிக்கவர்களாக இந்த மண் மாபியாக்கள் செயற்பட்டு வருவதும் அதற்கு ஆதரவாக மாவட்ட அரசியல் வாதிகள் செயற்படுவதும் தொடர் கதையாக மாறிவருகிறது.
கனிம வளங்களை முறையாக அகழ்ந்து அதனை மாவட்ட அபிவிருத்திக்கு முறையாக வழங்குவதற்கு மாவட்ட அபிவிருத்தி குழுவுக்கு இதுவரை முடியவில்லை. காரணம் மண் மாபியாக்களின் பணத்தில் தேர்தல் பிரச்சாரம் உட்பட கட்சி நிர்வாகத்தை நடாத்தும் கட்சி தலைவர்களால் மாவட்ட வளங்களை பாதுகாப்பதோ எதிர்கால சந்ததியினர் குறித்தோ கவலை இல்லை. அவர்களுக்கு மண் மாபியாக்களின் வருமானமும் அந்த வருமானத்தில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் வருமானம் குறித்தே சிந்திக்கின்றனர்.
மண் மாபியாக்கள்
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆற்று மணல் அகழ்வு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அனைத்து அபிவிருத்தி குழு கூட்டங்களிலும் இது ஒரு முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது.
அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான ஏறாவூர் பற்று பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி ஏறாவூர் பற்று பிரதேசத்தில் உள்ள கனிம வளங்களை அகழ்ந்து விற்பனை செய்வதற்கு இனி ஒரு போதும் அனுமதி வழங்கப் போவதில்லை என அவர் தெரிவித்திருந்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கும் போது பல விடயங்களை கூறியிருந்தார்.
“மிக முக்கியமாக ஆற்று மணல் அகழ்வு தொடர்பாக மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் எடுக்கும் முடிவுகளை முறியடிக்கும் வகையில் மண் மாபியாக்கள் கொழும்பிலும், அம்பாந்தோட்டையிலும் இருக்கும் அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் ஊடாக அழுத்தம் தருகின்றனர்.
24 மணி நேரமும் எமக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது. ஆற்று மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்குமாறும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆற்று மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள் வியாழேந்திரனை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்குமாறும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.
கடந்த காலங்களில் இவர்கள் பொலன்னறுவையிலும் அம்பாந்தோட்டையிலும் இருந்த அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றி பெற இங்கு இருந்து பணம் சேகரித்து கொடுத்தனர்.
அந்த அளவுக்கு மட்டக்களப்பு மாவட்ட மண் மாபியாக்களின் செயற்பாடுகள் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
துணைபோகும் அதிகாரிகள்
கடந்த காலங்களில் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மணல் அகழ்வுக்காக வழங்கப்பட்ட வயல் நிலங்கள் மிக மோசமாக தோண்டப்பட்டு குளங்கள் போல் காட்சியளிக்கிறது.
அந்த பகுதியில் விவசாய நிலங்கள் முற்றாக அழிந்து போய் உள்ளது. இப்போது தோண்டப்பட்ட இந்த வயல் காணிகளை யார் மூடுவது.
மண் அகழ்வுக்கு அனுமதி வழங்கிய திணைக்களங்கள், அதிகாரிகளுக்கு எந்த கவலையும் இல்லை. அவர்கள் அடுத்த மணல் அனுமதி பத்திரத்திற்கு அனுமதி வழங்க தயாராகி வருகின்றனர்.
இந்த மாவட்டத்தின் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதையோ இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதையோ பற்றி இங்குள்ள அதிகாரிகளுக்கு கவலை இல்லை.
ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 18 கல் குவாரிகள் உண்டு இவற்றை ஆய்வு செய்ய சென்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் எந்த கல் குவாரியாலும் விவசாயத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இப்படி அதிகாரிகளே துணைபோகின்றனர். நான் இருக்கும் வரை செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் எந்த ஆற்று மணல் அகழ்வுக்கும் அனுமதி வழங்கப்போவதில்லை.
ஓடர் போடும் அமைச்சர்கள்
கொழும்பில் இருந்து ஓடர் போடும் அமைச்சர்கள் அவர்களது மாவட்டத்தை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு அவர்களது மக்களிடம் நல்ல பெயர் எடுத்துக் கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஓடர் போடுவதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வழங்களை அழிப்பதற்கும் அனுமதிக்க முடியாது.
மட்டக்களப்பு மாவட்ட நிர்வாகத்தில் வெளிமாவட்ட அமைச்சர்கள் தலையிடத் தேவையில்லை. அதற்காகத்தான் எங்களை அமைச்சர்களாக நியமித்துள்ளனர்.
எனவே மட்டக்களப்பு மாவட்ட நிர்வாகத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் இனிமேல் மண் கிறவல் அகழ்வுக்கு அனுமதி வழங்க முடியாது நான் இருக்கும் வரை அதற்கு அனுமதிக்க மாட்டேன்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மற்றும் பொதுமக்கள் தேவைக்கு மிகவும் குறைந்த விலையில் விசேட மண் அனுமதிகளை வழங்குவோம்.” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |