பெரும்பான்மை பலம் எங்களிடம்:அரசியல் துரும்புச் சீட்டை வீச காத்திருக்கும் மைத்திரி
அரசாங்கம் தனக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருப்பதாக கூறினாலும் தான் அறிந்த வரையில் அப்படியான பெரும்பான்மை பலம் அரசாங்கத்திற்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தமது தரப்பிற்கு பெரும்பான்மை பலம் இருப்பதாகவும் தம்மிடம் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இரகசியமானது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக தமது தரப்பு முன்வைத்துள்ள யோசனைக்கு அமைய இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமர் நாடாளுமன்றத்திற்குள் தெரிவு செய்யப்பட வேண்டும் எனவும் அது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவியை பொறுப்பேற்ற எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மைத்திரிபால சிறிசேன இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன மிக சாதுர்யமாக காய்களை நகர்த்தக் கூடிய அரசியல்வாதி எனவும் தனது அரசியல் துரும்புச் சீட்டை வெளியில் எடுக்க சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அரசியல் தரப்பில் பேசப்படுகிறது.