சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் என போலியாக நடித்து மோசடி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கொழும்பு நகரில் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் செயல்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் தனியார் நிறுவனங்களை தொடர்புகொண்டு, தங்களை சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி உணவு, நிதி அல்லது பல்வேறு உத்தியோகபூர்வ நிகழ்வுகளுக்கான உதவிகளை கோரியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் பதவிகளை தவறாக பயன்படுத்தி இந்த மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அனைத்து நிறுவனங்களும் பொதுமக்களும் இவ்வாறான மோசடி அழைப்புகளால் ஏமாறாமல் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள் அல்லது இத்தகைய சம்பவங்கள் குறித்த தகவல்கள் இருப்பின், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்குமாறும் அல்லது கொழும்பு மத்திய பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் மேற்பார்வையாளர் (SSP) அவர்களை 071–8591551 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.