பொது மக்களுககு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும், பொலிஸ் மா அதிபரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டதாகக் கூறும் ஒரு கடிதம், முற்றிலும் தவறானது மற்றும் புனையப்பட்டது என்று பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இணைய நெறிமுறை பயன்பாட்டுடன் தொடர்புடைய பாலியல் வெளிப்படையான நடத்தையில் சிறார்களை சித்தரிக்கும் பொருட்களைப் பார்ப்பது, வைத்திருப்பது, பரப்புவது, விநியோகிப்பது அல்லது தயாரிப்பது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களை கைது செய்யுமாறு “சிறுவர்கள் மற்றும் பெண்கள் துஸ்பிரயோகம் தொடர்பான விசாரணைப் பணியகத்திற்கு” பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக, குறித்த பதிவு கூறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புனையப்பட்ட ஆவணங்கள்
இந்தநிலையில் இலங்கை பொலிஸாரோ, பொலிஸ் மா அதிபரோ, இலங்கை பொலிஸின் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட பிரிவாலோ இதுபோன்ற எந்தக் கடிதமும் இதுவரை வெளியிடப்படவில்லை என்று பொலிஸ் தரப்பு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
எனவே, இந்த ஆவணம் வேண்டுமென்றே தவறான தகவல்களை வழங்கும் செயல் மற்றும் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் முயற்சியாகும் என்றும் பொலிஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாக, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கோரியுள்ள பொலிஸ் தரப்பு, இதுபோன்ற தவறான உள்ளடக்கத்தைப் பகிர்வது, வெளியிடுவது அல்லது ஆதரிப்பதில் இருந்து விலகி இருக்குமாறு கடுமையாக அறிவுறுத்தியுள்ளது
புனையப்பட்ட ஆவணங்களை பகிரும் செயல்முறை சமூகத்திற்கு தவறான தகவலை வழங்குவது மட்டுமல்லாமல், சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகவும் இருக்கலாம் என்றும் பொலிஸ் தரப்பு எச்சரித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



