மட்டக்களப்பில் வெளிநாட்டு போலி முகவர்கள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை(Video)
மட்டக்களப்பில் போலி முகவர்கள் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பலரிடம் இலட்சக்கணக்கில் பணத்தினை மோசடி செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாடு செல்பவர்களை இவ்வாறு சுற்றுலா விசாவில் அனுப்பி ஏமாற்றியமை தொடர்பாக ஒரு மாதத்தில் 4 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன், போலி முகவரொருவர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எனவே போலி வெளிநாட்டு முகவர்கள் தொடர்பாக பொதுமக்கள் அவதானமாகவும், விழிப்பாகவும் செயற்படுமாறு நேற்று செவ்வாய்க்கிழமை (30.05.2023) மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கோரியுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட 4 பேர் முறைப்பாடு செய்துள்ள நிலையில் சித்தாண்டியைச் சேர்ந்த போலி முகவர் ஒருவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
போலி முகவர்கள் கைது
மேலும், 3 போலி முகவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் வெளிநாடு செல்லும் பொதுமக்கள் மட்டக்களப்பு பொது சந்தை கட்டிடத்திலுள்ள அரசாங்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு சென்று விபரங்களை கேட்டறியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே இவ்வாறான போலி வெளிநாட்டு முகவர்கள் தொடர்பாக பொதுமக்கள் விழிப்புடன் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்