நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை
பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், அவதானமற்ற முறையில் வாகனங்களை ஓட்டுவதையும் தவிர்க்குமாறு பொலிஸார் சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய ரீதியில் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மாத்திரம் வீதி விபத்துகளினால் 713 பேர் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
பாரிய விபத்துக்கள்
ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் பதிவான இந்த விபத்துக்கள் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விபத்துக்களில் உயிரிழந்தவர்களில் 248 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வூட்லர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்துவதே இவ்வாறான அதிகப்படியான மரணங்களுக்குக் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புத்தாண்டு விடுமுறை
அதிகரித்து வரும் விபத்துக்களைக் கருத்திற்கொண்டு, அதிவேக நெடுஞ்சாலைகள் உட்பட பிரதான வீதிகளில் பொலிஸ் பாதுகாப்பும் சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மது போதையில் வாகனம் செலுத்துவோரைக் கண்டறிய விசேட பிரிவுகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பிரிவு பிரதிப் பொலிஸ் மா அதிபர் சேனாதீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புத்தாண்டு விடுமுறையின் போது நீர் நிலைகளில் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும் பொலிஸார் கவலை வெளியிட்டுள்ளனர்.
சுற்றுப்பயணங்களின் போது ஆறுகள், குளங்கள் மற்றும் கடற்கரைகளில் நீராடும் போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொலிஸ் தலைமையகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.