போராட்டத்தை கைவிடுமாறு பொலிஸார் அச்சுறுத்தல் - உண்ணாவிரதத்திற்கு தடைவிதித்து நீதிமன்றால் தடை உத்தரவு
தமிழ் மக்களுக்கு நீதி கோரி அம்பாறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
உணவு தவிர்ப்பு போராட்டத்தைக் கைவிடுமாறு கோரியே தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வேண்டி லண்டனில் முன்னெடுக்கப்படும் அம்பிகை செல்வகுமாரின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அம்பாறையில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறையிலான உணவுதவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படுகிறது.
இன்றைய போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மற்றும் இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை, அம்பாறையில் முன்னெடுக்கப்படும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் சாமுவேல் ராஜன் என்பவருக்கு நீதிமன்ற தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை ,முன்னாள் இளைஞர் சேனைத் தலைவர் தாமேதரம் பிரதீபன் அம்பாறை மாவட்ட காணாமல் போனோர் சங்கத்தலைவி தம்பிராசா செல்வராணி, நாவிதன் வெளி பிரதேச சபை உறுப்பினர் நாகேந்திரன் தர்சினி, முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சுமத்திரா ஜெகதீசன், நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் அவர்களிடம் கையளிக்கவில்லை.
இந்த நீதிமன்ற தடை உத்தரவு அறிக்கையில் நீதவான் என்பதற்கு நீதிவான் எனவும் கல்முனை நீதவான் நீதிமன்றம் என்பதற்கு அநிதிவான் எனத் தமிழ் பிழைகள் விடப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு நீதவானின் கையொப்பத்துடன் தடை உத்தரவு கையளிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் முன்னாள் கல்முனை இளைஞர் சேனைத் தலைவர் தாமேதரம் பிரதீபன் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் இருக்கின்ற தமிழர்களுக்கான நீதி வேண்டிய நியாயமான சாத்வீக ரீதியிலான ஒரு போராட்டமே இது.
இந்தப் போராட்டம் கல்முனையில் இன்று இரண்டாவது நாளாகவும் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் கூட எங்களுக்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்னும் காணாமல் இருக்கின்றது. எனவே எமது மக்களுக்கான போராட்டம் இது.
இது எக்காரணத்திற்காக நடைபெறுகின்றது என்பதை உணர்ந்து பொதுமக்களைக் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம். இது எவ்வித அரசியல் சாயமுமற்ற, அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு போராட்டம்.
இதில் பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், பல்வேறு பட்ட அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள்,உள்ளுராட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து தங்கள் ஆதரவினை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
அத்துடன் எமது மக்கள், இளைஞர்கள் ஒவ்வொரு பிரதேசங்களிலும் இருந்து இன்னும் திரண்டு வந்து இந்த இடத்திலே தங்கள் பங்களிப்பினை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.
நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் என்.தர்சினி தெரிவிக்கையில்,
கல்முனையில் இடம்பெற்று வரும் உணவு தவிர்ப்புப் போராட்டமானது இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெறுகிறது.
பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் பலநெருக்கடிகளையும், இடைஞ்சல்களையும் தந்து இந்தப் போராட்டத்தைக் கைவிடுமாறு அச்சுறுத்தல் விடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இது தமிழ் பேசும் மக்களுக்கான போராட்டம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டம், அரசியற் கைதிகளுக்கான போராட்டம்.
கட்சி பேதங்களுக்கப்பால் உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் வந்து இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் குறிப்பிடுகையில்,
இந்த நாட்டிலே 2009ம் ஆண்டு இடம்பெற்ற மிக மோசமான மனிதப் படுகொலைகள், சர்வதேச நிபந்தனைகளுக்கு அப்பாற்பட்ட அடக்கு முறைகள் போன்ற மிகவும் மோசமான சம்பவங்களெல்லாம் தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கின்றார்கள்.
இது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்வுகளும் எட்டப்படவில்லை. தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை நடந்து கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், யுத்தம் முடிவுற்று சுமார் 12வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் எமது தமிழ் மக்கள் இன்றுவரை எவ்வித நியாயத்தையும் பெற முடியாத நிலைமையிலே வடகிழக்கு மாகாணங்களில் உணவு தவிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்கள்.
அந்த அடிப்படையில் கல்முனையிலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகள், சமூகத்தில் அக்கறை கொண்டவர்கள், கட்சி பேதமற்று இப்போராட்டத்தினை முன்னெடுத்திருக்கின்றார்கள்.
இலங்கையில் இந்த அரசாங்கத்தினால் எமக்கு எவ்வித நியாயமும் கிடைக்கப்பெறாது. எனவே சர்வதேச ரீதியில் எமக்கான நியாயம் கிடைக்கப்பெற வேண்டும் என்ற அடிப்படையிலே இந்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எங்களுக்குச் சர்வதேசமே தீர்வு வழங்க வேண்டும். எமது தீர்வு தொடர்பில் எவ்வித முன்னேற்றத்தையும் இந்த அரசு முன்னெடுக்கவில்லை.
ஐநா வின் பரிந்துரைகளில் ஒன்றையாவது இந்த அரசு நிறைவேற்றியிருக்கின்றதா என்றால் அது ஒரு கேள்விக்குறியான விடயம்.
இவ்வாறிருக்கும் போது நாங்கள் தொடர்ச்சியாக இந்த நாட்டிலே ஏமாற்றங்களைப் பெறமுடியாது. எமது பிரச்சினைக்கு நிலையான தீர்வு கிடைக்கப்பெற வேண்டும்.
யுத்தம் முடிவடைந்த கையோடு தற்போது நடைபெறுகின்ற ஒவ்வொரு விடயமும் தமிழர்கள் இந்தநாட்டிலே வாழக் கூடிய எந்த சந்தர்ப்பமும் இல்லாத நிலைமையையே காட்டுகின்றது.
எங்களுடைய மதரீதியான கடமைகளைச் செய்ய முடியாது. ஆலயங்களில் சுதந்திரமான செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது.
தற்காலத்தில் கூட நாங்கள் அமைதியான முறையில் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்க முடியாத வகையில் பொலிஸாரும், இராணுவமும் எம்மை அடக்குகின்றனர்.
நாங்கள் ஒரு ஜனநாயக முறையிலே வீதிக்கு இறங்கிப் போராடமுடியாமலும், அமைதியான முறையில் தற்போது இந்த ஆலயத்தின் முன்றலில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தாலும் கூட அதற்கும் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று கூறி அடக்குகின்ற நிலைமையே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிலைமை மாற வேண்டும்.
இந்த நாட்டிலே ஒரு ஜனநாயகம் நிலைக்க வேண்டும். அந்த அடிப்படையிலே தான் தற்போது எமது உறவுகள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கின்றோம். எமது நாட்டில் ஒரு சமாதானம் உருவாக்கப்படவேண்டும் அது சர்வதேச நாடுகளின் தலையீட்டினூடாக முன்னெடுக்கப்பட வேண்டுமென்று தெரிவித்தார்.










பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
