யாழில் சுயாதீன ஊடகவியலாளருக்கு பொலிஸார் கடும் மிரட்டல்!
யாழ்ப்பாணம்- குப்பிளான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்துக்கு வெளியே புகைப்படங்கள் எடுத்த சுயாதீன ஊடகவியலாளர் ஒருவருக்கு சுன்னாகம் பொலிஸார் கடும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
உள்ளுராட்சி சபைத் தேர்தல் தினமான இன்று (06) மாலை 04.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
செல்வநாயகம் ரவிசாந் என்ற ஊடகவியலாளருக்கே பொலிஸாரால் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
குறித்த ஊடகவியலாளரின் தேசிய அடையாள அட்டை, ஊடக அடையாள அட்டை என்பவற்றைப் பறிமுதல் செய்து சுமார் இருபது நிமிடங்களுக்கு மேலாகத் தடுத்து வைத்து விசாரணை செய்த பொலிஸார் கைது செய்யப் போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இறுதியாகச் சுயாதீன ஊடகவியலாளரின் தொலைபேசியிலிருந்த புகைப்படங்களை அவரது கைகளாலேயே அழிக்கச் செய்து விட்டு, தேசிய அடையாள அட்டை, ஊடக அடையாள அட்டை என்பவற்றைப் புகைப்படம் எடுத்த பின்னர் இனிமேல் தேர்தல் காலங்களில் வாக்களிப்பு நிலையத்தில் இவ்வாறு புகைப்படமெடுக்ககக் கூடாதென எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டார்.
எனினும், வாக்களிப்பு நிலையத்துக்கு வெளியே புகைப்படங்கள் எடுக்க அனுமதி உள்ளது என்பதைச் சுயாதீன ஊடகவியலாளர் தெளிவாகப் பொலிஸாரிற்கு எடுத்துக் கூறியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |