மறைத்து வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்களை கைப்பற்றிய பொலிஸார்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மிகவும் சட்டவிரோதமான முறையில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 171 சிறிய மதுபான போத்தல்களை அக்கரைப்பற்று பொலிஸார் இன்று கைப்பற்றியுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபான
போத்தல்கள் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவை மறைத்து
வைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து அக்கரைப்பற்று கலாச்சார மண்டப வீதியிலிருந்த வீடொன்றின் மேல்தள கூரையில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் குறித்த மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புனித வெசாக் தினமான இன்று அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யு. எம்.எஸ்.பி.விஜயதுங்கவின் பணிப்புரையின் கீழ் கிராமத்தைக் கட்டியெழுப்பும் பொலிஸ் பாதுகாப்புக் குழு நிலையப் பொறுப்பதிகாரி பிரிவு எஸ்.எம்.சதாத் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த மதுபான போத்தல்களும், சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 70 வயதுடைய பெண்ணொருவரும், 18 வயதுடைய இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.