யாழில் இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்: குற்றஞ்சாட்டும் உறவினர்கள்
யாழ். கொடிகாமத்தில் கிணறு வெட்டிய மண்ணை வெள்ளம் தேங்கும் இடத்தில் கொட்டிக்கொண்டிருந்த இளைஞன் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடாத்தியதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இளைஞனின் தந்தை ஒரு மாத காலத்திற்கு முன்பாக நோய்வாய்ப்பட்டு இறந்ததாகவும், இதனால், இளைஞனே தனது குடும்பத்திற்காக உழைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கொடிகாமம் பகுதியில் நேற்றையதினம் (24.10.2025) வெள்ளிக்கிழமை இரவு பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் அப்பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இளைஞனெ படுகாயமடைந்து, ஆபத்தான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
உழவு இயந்திரம்
குறித்த சம்பவம் தொடர்பில், படுகாயமடைந்த இளைஞனின் உறவினர்கள் தெரிவிக்கையில்,
“அப்பகுதியில் கிணறு ஒன்று தோண்டப்பட்டு வருகின்றது. அங்கு சேர்த்த மண்ணை, அருகில் உள்ள கடை ஒன்றின் முன்பாக வெள்ள நீர் தேங்கி நிற்பதனால், அந்த இடத்தில் கொட்டுவதற்காக உழவு இயந்திரத்தில் ஏற்றி வந்து அந்த மணலை பறித்துக்கொண்டு இருந்தவேளையே கடற்கரையில் நின்று பொலிஸார் இளைஞன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

பொலிஸார் அவ்விடத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லை. சந்தேகம் எனில் அருகில் வந்து விசாரணை செய்திருக்கலாம்.
உழவு இயந்திரத்தில் தப்பி செல்ல முற்பட்டவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தோம் என தற்போது பொலிஸார் கூறுகின்றனர். உழவு இயந்திரம் மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்க கூடிய வாகனமா? அதில் மணலை ஏற்றியவாறு தப்பியோட முடியுமா? பொலிஸார் இலகுவாக துரத்தி பிடித்து விடுவார்கள்.
துப்பாக்கிப் பிரயோகம்
ஆனால் அதனை செய்யாது கிணறு வெட்டிய களிமண்ணை பறித்துக்கொண்டு இருந்த உழவு இயந்திரம் மீதே சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

உழவு இயந்திரத்தை துரத்தி சுடுவது எனில் பின் பகுதியில் இருந்தே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் உழவு இயந்திரத்தின் பக்கவாட்டில் இருந்தே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உழவு இயந்திரத்தின் சில்லுகளில் பக்கவாட்டில் இருந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட அடையாளங்கள் காணப்படுகின்றன” எனக் கூறியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

