பொலிஸாரின் மேசையில் இருந்த மது போத்தல் - காணொளியால் எழுந்த சர்ச்சை
முல்லைத்தீவு - மல்லாவி பொலிஸ் நிலையத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் நிலையத்தில், பொலிஸ் அதிகாரிகள் அமர்ந்திருந்த மேசையில் மது போத்தல் இருந்ததாகக் கூறப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருவது சந்தேகத்தை தூண்டியுள்ளது.
பொலிஸ் அதிகாரியின் மேசையில் இருந்த மது போத்தல்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
துணுக்காய் பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் மல்லாவி பொலிஸ் நிலையக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
அந்த வேளையில், இரவு நேரத்தில் பொலிஸ் அதிகாரிகள் அமர்ந்திருந்த மேசையில் மது போத்தல் இருந்ததாகக் கூறி, அந்த சந்தேக நபர் தனது கைப்பேசியில் காணொளி பதிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், அவர் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த காணொளியை தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவேற்றியுள்ளார்.
வீட்டிற்கே சென்று மிரட்டிய பொலிஸ் அதிகாரிகள்
இதனைத் தொடர்ந்து, மல்லாவி பொலிஸார் குறித்த இளைஞரின் வீட்டிற்குச் சென்று அவரை எச்சரித்ததுடன், பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், பொலிஸ் நிலையத்திற்கு வராவிட்டால், போலி வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைப்போம் என மிரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, குறித்த இளைஞர் தற்போது பொலிஸ் நிலையத்திற்கு செல்லாமல் தலைமறைவாக உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி மீது உரிய விசாரணை நடத்தி, தேவையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸ் மா அதிபரிடமும், சிவில் பாதுகாப்பு அமைச்சிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.