பிள்ளையான் கைது செய்யப்பட்ட விதம் பிழையானது! சாட்சிகள் ஏதும் இல்லை என வாதாடும் கம்மன்பில
பிள்ளையான் கைது செய்யப்பட்ட விதம் பிழையானது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில(Udaya Gammanbila) தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிக்க வேண்டும் என தேர்தல் மேடைகளில் கூப்பாடு போட்டவர்கள், சுமந்திரனுடன் இணைந்து பல்வேறு நகரங்களில் பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிக்க வேண்டும் என கருத்தரங்குகளை நடத்தியவர்கள் இன்று அந்த சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பிள்ளையானுடனான சந்திப்பு..
அந்த வகையில் பிள்ளையானின் கைது பிழையானது என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்படும் போது என்ன காரணத்தினால் கைது செய்யப்படுகின்றார் என்பது உறவினர்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும் எனவும் கைது செய்யப்படும் நபருக்கு அது குறித்து அறிவிக்க வேண்டும் எனவும் அவ்வாறான ஆவணங்கள் எதனையும் அதிகாரிகள் வழங்கவில்லை எனவும் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
தான் பிள்ளையானை சந்தித்துக் கொண்டிருக்கும்போது குற்ற விசாரணை பிரிவின் அதிகாரியான பாயிம் என்ற நபர் தாம் பிள்ளையானை சந்திப்பது குறித்து தனது சொந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தி முகநூலில் பதிவு ஒன்றை இட்டார் எனவும் இவ்வாறான ஒரு சம்பவம் இதற்கு முன்னர் பொலிஸ் திணைக்களத்தில் இடம்பெற்றதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் ஜனாதிபதிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் பிரதான சூத்திரதாரி ஒருவரை ஜனாதிபதி தற்போது தயாரிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீம் என குறிப்பிட்டுள்ளதாகவும் இவரை தவிர வேறு ஒருவர் இந்த தாக்குதலில் தொடர்பு பட்டிருக்கிறார் என்பதற்கு சாட்சியங்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
இந்த பின்னணியில் தேர்தலில் வாக்குறுதி அளித்ததைப் போன்று தற்பொழுது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஓர் பிரதான சூத்திரதாரியை உற்பத்தி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது எனவும் தற்பொழுது அவர் முயலை நரியாக்கியேனும் இவ்வாறு ஓர் சூத்திரதாரியை முன்வைக்க வேண்டி இருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
