போராட்டகாரர்களை அப்புறப்படுத்தியமை குறித்து விளக்கமளித்துள்ள பொலிஸ் ஊடகப்பிரிவு
ஜனாதிபதி செயலகத்தில் தங்கி இருந்த நபர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த பாதுகாப்பு பிரிவினர் இன்று அதிகாலை மேற்கொண்ட நடவடிக்கை சம்பந்தமாக பொலிஸ் ஊடகப்பிரிவு விளக்கமளித்துள்ளது.
போராட்டகாரர்கள் திகதிகளையும் காலத்தையும் கூறி காலம் கடத்தி வந்தனர்
பல சந்தர்ப்பங்களில் அங்கிருந்து வெளியேறுமாறு போராட்டகாரர்களுக்கு அறிவித்த போதிலும் அவர்கள் பல்வேறு திகதிகள், காலத்தை கூறி அங்கு தங்கி இருந்தனர்.
ஜனாதிபதி செயலகத்தில் சட்டவிரோதமாக தங்கிருந்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த பொலிஸார், முப்படையினர், விசேட அதிரடிப்படையினர் இணைந்து கூட்டு நடவடிக்கையை இன்று எடுத்தனர்.
அப்போது அங்கிருந்தவர்கள் செயலகத்தின் கட்டடத்தில் இருந்து வெளியில் சென்றனர். எனினும் ஜனாதிபதி செயலகத்தின் பிரதான முன் வாயில் கதவுக்கு அருகில் தடையேற்படுத்தி அங்கு இருந்தவர்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
ஜனாதிபதி செயலகத்திற்கு தடையேற்படும் வகையில் நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜனாதிபதி செயலகத்தை தமது சொந்த இடத்தை போல் பயன்படுத்திய போராட்டகாரர்கள்
போராட்டகாரர்கள் கடந்த 9 ஆம் திகதியில் இருந்து ஜனாதிபதி செயலகத்திற்குள் தங்கியிருந்து, அதனை அவர்களின் இடம்போல் பயன்படுத்தி, அங்கு வந்து செல்லும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தடையேற்படுத்தினர்.
பொலிஸார் அங்கு சென்ற போது கூட அங்கிருந்து செல்லுமாறு கூறிய சந்தர்ப்பங்களும் உள்ளன. அரச நிர்வாகத்தில் மிக முக்கிய பணிகளை நிறைவேற்றும் அலுவலகங்கள் கட்டமைப்பு அமைந்துள்ள செயலகத்தை இந்த போராட்டகாரர்கள், சட்டவிரோதமாக கைப்பற்றி வைத்திருந்தனர்.
நாட்டின் பொது மக்களின் தேவைகளுக்காக பல்வேறு முடிவுகளும் தீர்மானங்களும் ஜனாதிபதி செயலகத்திற்குள்ளே எடுக்கப்படுகின்றன. இதில் இருந்து அமைதியான முறையில் வெளியேறுமாறு சம்பந்தப்பட்ட சட்ட ரீதியான அதிகாரிகள் பல முறை கோரிக்கை விடுத்து இருந்தனர்.
எனினும் அவர்கள் பல திகதிகளையும் காலங்களையும் கூறி அங்கு தங்கியிருக்க முயற்சித்தமை பாதுகாப்பு பிரிவினரால் கண்காணிக்கப்பட்டது. இப்படியான சூழ்நிலையில், கடந்த 14 ஆம் திகதி மற்றும் 18 ஆம் திகதி பொலிஸ் உயர் அதிகாரிகள், போராட்டகாரர்களை சந்தித்து, ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அமைதியாக வெளியேறுமாறு கோரிக்கை விடுத்தனர்.
எனினும் அதனை மறுத்து அவர்கள் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு ஆவேசமான முறையில் பதிலளித்தனர். மேலும் ஜனாதிபதி செயலகத்தில் உள்ள பெறுமதியான அரச சொத்துக்கள் மற்றும் ஆவணங்களுக்கு சேதம் ஏற்படுவதாக கண்டறியப்பட்டது.
இவ்வாறான நிலையில், அமைதியை மதிக்கும் தரப்பினரும் இந்த போராட்டகாரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தாதது குறித்து பொலிஸாரிடம் கேள்விகளை எழுப்பி, குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.
இந்த நிலைமையை ஆராய்ந்த பின்னர், வேறு மாற்று வழியில்லை என்பதால், நடவடிக்கை மூலம் போராட்டகாரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பொது அமைதியை பாதுகாப்பதற்காக எடுக்க வேண்டிய சரியான நடவடிக்கைகளை பொலிஸார் எடுப்பார்கள் எனவும் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.