யாழ் மத்திய கல்லூரி முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்! (Photos)
நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை இன்றையதினம் யாழ் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முன்பாக இன்றைய தினம் காலை 10.30 மணியளவில் காணாமல் போனோரின் உறவுகள் நீதி அமைச்சின் நடமாடும் செயலமர்வில் காணாமல் போனோர் விவகாரத்தை கையில் எடுக்கக்கூடாது என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் போராட்டக்காரர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. போராட்டக்காரர்களுடன் பொலிஸார் முரண்பட்ட நிலையில் மத்திய கல்லூரி முன்பாக குழப்பமான நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட குறித்த நடமாடும் சேவை இன்றும் நாளையும் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் நீதி அமைச்சர் அலி சப்ரி, வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன்,நீதி அமைச்சின் செயலாளர் மாயாதுன்னை, வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் உள்ளிட்ட உயரதிகாரிகள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.












