வட்டுக்கோட்டை பகுதியில் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்கள் பதிவு
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மூன்று இடங்களில் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி பகுதியில் நேற்றிரவு (04) மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அவ் வீதியால் பயணித்த முதியவர் ஒருவருக்கு வாளினை காட்டி மிரட்டி அவரது மோதிரத்தை அபகரித்து சென்றுள்ளனர்.
அவர்கள் மோதிரத்தை அபகரித்துவிட்டு மூளாய் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள கடைக்கு சென்று அங்கு நின்ற வாடிக்கையாளர் ஒருவருக்கும் கடையின் முதலாளிக்கும் கழுத்தில் வாளினை வைத்து மிரட்டி 85 ஆயிரம் ரூபா பணத்தினை அபகரித்துச் சென்றுள்ளனர்.
இதன்போது வட்டுக்கோட்டையை சேர்ந்தவர்கள் அவர்கள் இருவரையும் துரத்தியவாறு நல்லூர் அரசடி வரைக்கும் சென்றனர். இதன்போது அவ்விடத்திற்கு வந்த வேறு நபர்கள் நகை மற்றும் பணத்தை அபகரித்தவர்களை துரத்திச் சென்ற வட்டுக்கோட்டையை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி மூளாய் வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று பகல் தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளன.
வீட்டில் உள்ளவர்கள் இன்றைய தினம் யாழ். மாநகர முதல்வரின் திருமண சடங்கிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தவேளை நகை களவாடப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



