பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய குற்றச்சாட்டில் மூவர் கைது
காலி,எல்பிட்டிய பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் மூவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
எல்பிட்டிய, நவந்தகல கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இசைநிகழ்ச்சியொன்றில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை தடியால் தலையில் தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இசைநிகழ்ச்சிக்கு வருகை தந்த இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை தணிக்க சென்ற பொலிஸ் சார்ஜன்ட் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று சந்தேக நபர்கள் கைது
இந்நிலையில் சம்பவத்தில் காயமடைந்த சார்ஜன்ட் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவ இடத்தில் இருந்த ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இத்தாக்குதல் தொடர்பாக மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..




