பெண்ணின் கழுத்திலிருந்த தங்க சங்கிலி அறுப்பு: சந்தேகநபர் மடக்கி பிடிப்பு
மட்டக்களப்பு - கொக்குவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்ற நபர் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அறுத்து எடுத்துக்கொண்டு தப்பி ஒடிய நிலையில் பொதுமக்கள் மடக்கி பிடித்து பொஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் நேற்று இரவு (5) இடம்பெற்றுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொக்குவில் இரண்டாம் குறுக்கு வீதியில் நேற்று இரவு 6.30 மணியளவில் பெண் ஒருவர் மரக்கறிகளை கொள்வனது செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் பெண்ணின் கழுத்தில் இருந்த 2 அரை பவுண் எடை கொண்ட தங்க சங்கிலியை அறுத்து எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார்.
இந்நிலையில் கொள்ளையரின் மோட்டார் சைக்கில் இலக்கத்தையும் குறித்த நபரையும் அடையாளம் கண்டு கொண்ட பெண் உடனடியாக தனது மகனுக்கு கையடக்க தொலைபேசியில் தெரிவித்ததையடுத்து, குறித்த பெண்ணின் மகன் மற்றும் அங்கிருந்த அவனது நண்பர்கள் குறித்த மோட்டார் சைக்கிளில் சென்ற கொள்ளையனை வழிமறித்து மடக்கிபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் அபகரித்த தங்க சங்கிலியை வீதியில் வீசியுள்ளதாகவும் கஷ்டத்தின் மத்தியில் கொள்ளையிட்டதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அபகரித்து வீதியில் வீசிய தங்க சங்கிலியை பொலிஸாரும் உறவினர்களும் அந்த பகுதியில் தேடிய போது எதுவும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் முன்னிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 8 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.



