சத்துருக்கொண்டான் நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தியவர்களுக்கு எதிராக பொலிஸ் விசாரணை
மட்டக்களப்பு - சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுத்தூபியில் கடந்த 09.09.2021அன்று அஞ்சலி செலுத்தியவர்களுக்கு எதிராக பொலிஸ் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் துரைசிங்கம் மதன் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை மட்டக்களப்பு தலைமையக பொலிஸிற்கு மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களான த.கௌரி மற்றும் தான் அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
குறித்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டதற்கான காரணம் மற்றும் அங்கு விளக்கேற்றியமை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது.
சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் ஆதாரங்களுடன் சாட்சியங்கள் தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் விளக்கேற்றியமை குறித்து விசாரணைகள் நடத்தப்படுவது இந்த நாட்டின் சட்ட நிலைமையினை கேள்விக்குட்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது குறித்து மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் த.கௌரி கூறுகையில்,
கடந்த 09.09.1990 அன்று மட்டக்களப்பு சத்துருகொண்டான் பனிச்சையடி, கொக்குவில், பிள்ளையாரடி ஆகிய கிராமங்களில் மாலை வேளையில் அப்பாவி பொது மக்களை ஒன்று கூடல் என்ற பெயரில் சத்துருகொண்டான் பொலிஸ் முகாமிற்கு அழைத்துச் சென்று படுகொலை செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பல ஆதாரங்கள் வெளிவந்தும் இதற்கான நீதி கிடைக்கவில்லை என்று வருடா வருடம் கண்ணீருடன், இறந்த 186 உயிர்களின் உறவுகள் இறந்தவர்களின் நினைவு நாளில் சத்துருக்கொண்டான் சந்தியில் அமைந்துள்ள தூபியில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவது வழமை.
அந்தவகையில் கடந்த 09.09.2021 அன்று சூழ்நிலை அறிந்து மிக குறைவான மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி விளக்கேற்றினர். பனிச்சையடி கிராமத்தில் பிறந்தவள் என்ற ரீதியில் இறந்தவர்களின் இழப்புகள் சோக கதைகள் கேட்டே நான் எனது ஊரில் வளர்ந்தவள்.
அந்தவகையில் 2002ம் ஆண்டு இந்த தூபியானது அமைக்கபட்ட நாளில் இருந்து இந்த நிகழ்விற்கு உரிய நேரத்தில் நான் செல்வேன். இது புதிய விடயம் அல்ல. குறிப்பாக உள்ளூராட்சி தேர்தலில் மட்டு. மாநகரசபைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக உறுப்பினராக தெரிவானேன்.
ஆனால் எனது வட்டார மக்களின் வாக்குகள் கிடைத்தே எனக்கான அடையாளம் கிடைத்தது, அந்தவகையில் மக்களின் நலன்கள் பொதுவான விடயங்களில் பங்கேற்பது தவறான விடயம் அல்ல.
ஆகவே தற்போதும் நான் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது இந்த தூபியை கடக்காமல் செல்ல முடியாது, இந்த தூபியானது கிராமத்தில் உயிரிழந்த உறவுகளின் அடையாள கல்லறை மட்டுமே தவிர வேறு எந்த தவறான விடயமும் இல்லை.
பிறந்த மண்ணில் எனது கடமையை செய்தேன் என்பதை வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.






