ஊடக நிறுவனங்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
உறுதிப்படுத்தப்படாத, விசாரணை நிலையில் காணப்படும் மற்றும் நீதிமன்றங்களில் விசாரணை செய்யப்பட்டு வரும் வழக்குகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை ஊடகங்களில் மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிடுவது தொடர்பில் பொலிஸ் திணைக்களம் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் வழக்குகள் எதிர்காலத்தில் நீதிமன்றங்களில் தொடுக்கப்பட உள்ள வழக்குகள் மேலும் உறுதிப்படுத்தப்படாத விசாரணை நிலையில் காணப்படும் வழக்குகள் தொடர்பான புகைப்படங்கள் காணொளிகள் மற்றும் தொகுக்கப்பட்ட அல்லது தொகுக்கப்படாத மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொகுக்கப்பட்ட காணொளிகள் பல்வேறு ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாக பொலிஸார் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இந்த காட்சிகள் போதைப் பொருள் சுற்றிவளைப்பு, சில குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பிலான காணொளிகள் எனத் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறான புகைப்படங்கள் காணொளிகள் மற்றும் தொகுக்கப்பட்ட அல்லது தொகுக்கப்படாத செயற்கை நுண்ணறிவு காணொளிகள் நீதிமன்ற வழக்கு விசாரணைகளின் போது மனுதாரர்கள் அல்லது பிரதிவாதிகளுக்கு தாக்கத்தை செலுத்தக்கூடும் எனவும் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தாபன விதி கோவைக்கு அமைவாக ஊடக நிறுவனங்களுக்கு செய்திகளை வழங்குவதில் வரையறைகளை விதித்துள்ளது இதன் அடிப்படையில் அமைச்சின் செயலாளர் திணைக்கள பிரதானி அல்லது அந்த பிரதானியின் அங்கீகாரம் பெற்ற அதிகாரிகள் மட்டும் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உறுதிப்படுத்தப்பட்ட சரியான தகவல்கள் அடங்கிய புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் போலீஸ் ஊடகப் பிரிவின் ஊடாக மட்டும் வெளியிடப்படும் எனவும் இந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தொடர்பிலான பொறுப்பினை ஊடகப்பிரிவு ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மைக்கு புறம்பான உறுதிப்படுத்தப்படாத தொகுக்கப்பட்ட அல்லது செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் காணொளிகள் என்பனவற்றை பதிவிடுவது தொடர்பிலான பொறுப்பினை தனிப்பட்ட நபர்களும் அந்த ஊடக நிறுவனங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் இந்த சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கு விசாரணைகளின் போது பாதிக்கப்பட்டால் அதற்கான பொறுப்பினை தனிப்பட்ட நபர்கள் அல்லது நிறுவனம் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் அரசியல் அமைப்பின் பிரகாரம் நாட்டின் பிரஜை ஒருவருக்கு காணப்படும் அடிப்படை உரிமைகள் மீறப்படவோ அல்லது வரையறுக்கப்படவோ இல்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



