சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட முக்கிய குற்றவாளிகள் விரைவில் கைது
சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட முக்கிய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பொலிஸாரின் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டு 13 நாடுகளில் தலைமறைவாக உள்ள 112 இலங்கையர்களை அடையாளம் கண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றவாளிகள் எதிர்வரும் 2027 ஆம் ஆண்டிற்குள் இலங்கை கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முழு நாடும் ஒன்றாக என்ற தேசிய செயல்பாட்டின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து இன்று ஊடகங்களுக்கு தெளிவுபடுத்திய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள குறித்த சந்தேகநபர்கள் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோத வருமானத்தை ஈட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் இலங்கை கொண்டுவரப்பட்டதும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் குறித்து இரண்டு சிறப்பு பொலிஸ் பிரிவினர் 24 மணி நேரமும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட முழு நாடும் ஒன்றாக என்ற தேசிய நடவடிக்கை தனது முதலாம் ஆண்டை நிறைவு செய்துள்ளது.
இந்த ஓரு வருட காலத்தில் 2,835 கிலோ கிராம் ஹெரோயின், 3,550 கிலோ கிராம் ஐஸ், 297 கிலோ கிராம் கொகேன் மற்றும் 11,167 கிலோ கிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 5,743 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதுடன் கைது செய்யப்பட்டவர்களில் 450 சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான போராட்டங்கள் பொலிஸாருக்கு பெரும் சவாலாக இருந்தாலும், முப்படையினரின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.