கட்டுத்துவக்கு வெடிப்பு சம்பவம்: இளைஞரொருவர் படுகாயம்
கோமரங்கடவல காட்டுப்பகுதியில் கட்டுத்துவக்கு வெடிப்பு சம்பவத்தில் இளைஞரொருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு படுகாயமடைந்தவர் கோமரங்கடவல-பக்மீகம பகுதியைச் சேர்ந்த ரணசிங்ககே சுமித் ரணசிங்க (24வயது) எனவும் தெரியவருகின்றது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, அவரது எருமை மாடுகள் காணாமல்போன நிலையில் அதனை தேடுவதற்காக சக நண்பருடன் குபுக்வெவ காட்டுப் பகுதிக்கு சென்றபோது கட்டுத் துவக்கு வெடித்ததாகவும் பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. அவருடைய இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து கோமரங்கடவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



