யாழ்.நவாலி சென் பீற்றர் தேவாலயத்திற்கு முன்பாக குவிக்கப்பட்ட பொலிஸார்
யாழ்.நவாலி சென் பீற்றர் தேவாலயத்திற்கு முன்னால் வீதியோரத்தில் உள்ள பழமை வாய்ந்த மரமொன்றினை இன்று வெட்டும்போது அவ்விடத்தில் பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் குவிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஆனைக்கோட்டையில் இருந்து நவாலி ஊடாக காரைநகர் செல்லும் வீதியின் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்காக வீதியோரத்தில் உள்ள 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரமொன்றினை வெட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் குறித்த மரத்தினை வெட்டுவதற்காக வந்துள்ளனர். இதன்போது குறித்த பகுதி மக்கள் மரத்தினை வெட்ட வேண்டாம் என எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் குறித்த மரத்தினை வெட்டாமல் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் திரும்பி சென்றுள்ளனர். இந்நிலையில் மக்கள் ஒன்றுகூடி, வீதி அபிவிருத்திக்காக மரத்தினை வெட்டுமாறு கூறி யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேஷனுடன் கலந்துரையாடியுள்ளனர்.
இதனையடுத்து மரத்தினை இன்று வெட்டுமாறு அனுமதி வழங்கப்பட்டது. அதனடிப்படையில் மரம் வெட்டும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆகையால் அப்பகுதியில் வன்முறைகள் ஏற்படுவதை தடுப்பதற்கு பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.





