பொலிஸ் உத்தியோகத்தர்களின் சீருடைகளில் ஏற்படப் போகும் மாற்றம்
பொலிஸ் உத்தியோகத்தர்களின் சீருடைகளில் மாற்றம் கொண்டு வர யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.
நாட்டின் காலநிலை பொருந்தக் கூடியதும் நவீன தொழில்நுட்ப சாதனங்களுடன் கூடிய சீருடை ஒன்று எதிர்வரும் 2027ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது வரவு செலவுத் திட்ட உரையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் கடமைகளை டிஜிட்டல் மயப்படுத்தல், பொலிஸ் பயிற்சி முழுமையாக நவீனமயப்படுத்தல் மற்றும் நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையை புனரமைத்தல் போன்றவற்றுக்காக 9500 மில்லியன் ரூபா ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் திணைக்களத்தின் அனைத்து பிரிவுகளையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வருவதற்கான சாத்திய ஆய்வு மற்றும் திட்டமிடலுக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, சைபர் குற்றச் செயல்கள் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பான குற்றச் செயல்களை விசாரணை செய்ய 15 மாடிகளைக் கொண்ட கட்டிடமொன்றை நிர்மானிப்பதற்கான சாத்திய ஆய்வு மேற்கொள்ள 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.