இலங்கையில் தலைதூக்கியுள்ள பாதாள உலகக்கும்பல்கள்: அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல்கள் மற்றும் வன்முறை கும்பல்கள் அதிகமாக நடைபெறும் ஏழு பொலிஸ் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (08) நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
மேற்கு மாகாணம் மற்றும் தெற்கு மாகாணத்தில் இந்த பொலிஸ் பிரிவுகள் அமைந்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
மேற்கு மாகாணத்தில் கொழும்பு வடக்கு, நுகேகொடை மற்றும் கம்பஹா, தென் மாகாணத்தில் எல்பிட்டி, தங்காலை, காலி மற்றும் மாத்தறை போன்ற பொலிஸ் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் பற்றிய தகவல்கள்
மேலும், இந்த குற்றவாளிகள் பற்றிய தகவல்கள் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் உளவாளிகள் மூலமாகவும் பெறப்படுவதாகவும்,பாதாளக் கும்பல்கள் மற்றும் குற்றவாளிகளைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் பகுதிகளில் கூடுதல் பொலிஸ் பாதுகாப்பு நிறுவப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் தப்பிச் செல்லும்போது அவர்களைக் கைது செய்ய சிறப்பு மோட்டார் சைக்கிள் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், பாதாள உலக குற்றவாளிகளைக் கட்டுப்படுத்த,சோதனைகள் உள்ளிட்ட தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல்
பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சட்டவிரோதமாக கையகப்படுத்திய சொத்துக்கள் குறித்து தகவல் தேடப்படும் என்றும், அத்தகைய சொத்துக்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், யாழ்ப்பாண பகுதியில் சமீப காலமாக பாதாள உலகக் கும்பல்கள் தலைதூக்கி வருவதாகவும், அதனை தடுக்க தான் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகவும், அதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |