முன்னாள் பொலிஸ் மா அதிபர் குறித்து வெளியான தகவல்
இலங்கையின் முன்னாள் பொலிஸ் மா அதிபர், காலி மாவட்டத்தின் தெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியின் அடிப்படை உரிமைகளை மீறியதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களின் செல்வாக்கின் பேரில் 'நியாயமற்ற முறையில் தங்காலை பொலிஸ் பிரிவுக்கு அவரை, முன்னாள் பொலிஸ் அதிபர் இடமாற்றம் செய்துள்ளார் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அடிப்படை உரிமை
விஜித் மலல்கொட, மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமே இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன, அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மனுதாரரின் அடிப்படை உரிமைகளை மீறி தெலிக்கடை பொலிஸ் நிலையத்திலிருந்து அதன் பொறுப்பதிகாரியை, தங்காலைக்கு இடமாற்றியுள்ளதாக நீதியரசர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், மனுதாரர் தற்போது பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றுவதால், அவரை மீண்டும் தெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்கு மாற்றுமாறு எந்த உத்தரவையும் பிறப்பிக்கப்போவதில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.